துமகூரில் தேவகவுடாவை தோற்கடித்தது யார்? காலம் கடந்து அமைச்சர் பரமேஸ்வருக்கு ஞானோதயம்
துமகூரில் தேவகவுடாவை தோற்கடித்தது யார்? காலம் கடந்து அமைச்சர் பரமேஸ்வருக்கு ஞானோதயம்
ADDED : மார் 31, 2024 04:53 AM

பெங்களூரு, : “துமகூரு தொகுதியில் போட்டியிடும்படி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நாங்கள் அழைத்து வரவில்லை. தேர்தலில் ம.ஜ.த.,வினர் பணியாற்றவில்லை,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் போட்டியிடும்படி தேவகவுடாவை நாங்கள் அழைத்து வரவில்லை; அவரை தோற்கடிக்கவும் இல்லை. தேவகவுடாவுக்கு ஆதரவாக, அவரது கட்சியினரே பணியாற்றவில்லை.
அப்போது நான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தேன். தேவகவுடா துமகூரில் போட்டியிடுகிறார் என, ஊடகங்களில் செய்தி வந்தது.
இதை கவனித்த நான், 'நீங்கள் போட்டியிடுகிறீர்களா?' என, அவரிடம் கேட்டேன். அவரும், 'இன்னும் முடிவு செய்யவில்லை. பெங்களூரு வடக்கு தொகுதியில் களமிறங்க ஆலோசிக்கிறேன்' என, கூறினார்.
அதன்பின் தேவகவுடா, எங்கள் கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தி, என்ன முடிவு செய்தார் என்பது எனக்கு தெரியாது. 'துமகூரில் தேவகவுடா போட்டியிடுகிறார்' என, எங்கள் கட்சி மேலிடத்திடம் இருந்து உத்தரவு வந்தது.
நாங்கள் நேர்மையான முறையில் அவருக்காக பணியாற்றினோம். அவர் பிரதமராக பதவி வகித்தவர்.
எங்கள் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெறவைக்க வேண்டும் என்பது, எங்கள் நோக்கமாக இருந்தது.
எதிர்க்கட்சிகளை மிதித்து தள்ளி, மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், விசாரணை அமைப்புகளை பா.ஜ., துஷ்பிரயோகம் செய்கிறது. ஜனநாயக நடைமுறையில் விசாரணை அமைப்புகளின் பணிகள் நிரந்தரமாக நடக்கும்.
இத்தனை நாட்கள் மவுனமாக இருந்துவிட்டு, தேர்தலின்போது நடவடிக்கையில் இறங்கியது ஏன்? வருமான வரித்துறையினர், வரியை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியதன் அர்த்தம் என்ன? காங்கிரசின் வங்கி கணக்கை முடக்கியது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.

