நாகமங்களா கலவர பின்னணியில் யார்? பா.ஜ., சத்ய சோதனை கமிட்டி ஆய்வு!
நாகமங்களா கலவர பின்னணியில் யார்? பா.ஜ., சத்ய சோதனை கமிட்டி ஆய்வு!
ADDED : செப் 17, 2024 04:44 AM

மாண்டியா,: நாகமங்களாவில் கலவரம் நடந்த பகுதிகளில், பா.ஜ.,வின் சத்ய சோதனை கமிட்டி நேற்று ஆய்வு நடத்தியது. 'உண்மை என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும். கலவரத்தின் பின்னணியில் இருக்கும், கண்ணுக்கு தெரியாதவர்களை கண்டுபிடிக்க வேண்டும்,' என்று குழு தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில், இம்மாதம் 11ம் தேதி, விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. அப்போது, மர்ம நபர்கள் கற்கள் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
கடைகள், வாகனங்களுக்கு பெட்ரோல் குண்டுகள் வீசி, தீ வைத்து எரிக்கப்பட்டதால், கலவரமாக மாறியது. இதில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த இருவர் பங்கேற்றது தெரிய வந்தது.
உண்மை தன்மை
இந்நிலையில், கலவரம் ஏற்பட்டதற்கான உண்மை தன்மையை கண்டறிவதற்காக, பா.ஜ., சார்பில், மல்லேஸ்வரம் எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா தலைமையில், சத்ய சோதனை கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, கலவரம் ஏற்பட்ட நாகமங்களாவில் நேற்று ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரித்து தகவல் பெற்றனர். கடைகளின் உரிமையாளர்கள், பொது மக்களிடம் ஆலோசனை நடத்தினர்.
பின், அஸ்வத் நாராயணா கூறியதாவது:
நாகமங்களா கலவரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்; உண்மை என்ன என்பது தெரியப்படுத்த வேண்டும். கலவரத்தின் பின்னணியில் இருக்கும், கண்ணுக்கு தெரியாதவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
நோக்கம் என்ன?
இதை அரசுக்கு தெரியப்படுத்தவே, சத்ய சோதனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் கேரள நபர்கள் எப்படி பங்கேற்றனர்; அவர்களின் நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
ஆட்சி நிர்வகிப்பில், காங்கிரஸ் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. விநாயகர் சிலைகளையே காங்கிரஸ் அரசு கைது செய்தது.
இத்தகைய மன நிலை கொண்டவர்களால், மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சத்ய சோதனை கமிட்டி, அறிக்கை தயாரித்து, மாநில தலைவர் விஜயேந்திராவிடம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளது.