தேவகவுடா தோல்விக்கு யார் காரணம்? 5 ஆண்டுக்கு பின் அமைச்சர் புது விளக்கம்
தேவகவுடா தோல்விக்கு யார் காரணம்? 5 ஆண்டுக்கு பின் அமைச்சர் புது விளக்கம்
ADDED : மார் 23, 2024 11:09 PM

ஹாசன்: ''கடந்த லோக்சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்விக்கு யார் காரணம்,'' என்று, அமைச்சர் ராஜண்ணா புதிய விளக்கம் கொடுத்து உள்ளார்.
கடந்த 2019 ல் நடந்த லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பேரன் பிரஜ்வலுக்காக ஹாசன் தொகுதியை விட்டுகொடுத்த தேவகவுடா, துமகூரில் இருந்து போட்டியிட்டார். ஆனால் பா.ஜ.,வின் பசவராஜுடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அந்த தோல்வியை தேவகவுடாவால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
துமகூரில் நான் தோற்றதற்கு, அமைச்சர் ராஜண்ணாவே காரணம் என்று, அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜண்ணா ஹாசனில் நேற்று அளித்த பேட்டி:
ஹாசனில் தேவகவுடாவை, புட்டசாமிகவுடா தோற்கடித்தார். இப்போது தேவகவுடா பேரன் பிரஜ்வலை தோற்கடிக்க, புட்டசாமிகவுடா பேரன் ஸ்ரேயஷ் படேலை களம் இறக்கி உள்ளோம்.
அவர் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். கர்நாடகா மக்கள் 25 பா.ஜ., - எம்.பி.,க்களை பார்லிமென்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சபைக்கு உள்ளேயும், வெளியேயும் கர்நாடகா சார்பில் அவர்கள் பேசவே இல்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் துமகூரில் தேவகவுடா தோற்றதற்கு நான் காரணம் இல்லை. மக்கள் தலைவரான முத்தேஹனுமேகவுடாவின் வாய்ப்பை பறித்து, தேவகவுடா போட்டியிட்டார். அதை துமகூரு மக்களால் பொறுக்க முடியவில்லை. இதனால் அவரை தோற்கடித்து விட்டனர். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

