உ.பி., ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி பலிகளுக்கு... யார் பொறுப்பு? போலே பாபா தலைமறைவு; ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு
உ.பி., ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி பலிகளுக்கு... யார் பொறுப்பு? போலே பாபா தலைமறைவு; ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 04, 2024 02:27 AM

ஹாத்ரஸ், உத்தர பிரதேசத்தின் ஹாத்ரசில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பலியானோர் எண்ணிக்கை, 121 ஆக உயர்ந்துள்ளது. இந்நிகழ்வில் 80,000 பேருக்கு அனுமதி அளித்த நிலையில், 2.5 லட்சம் பேர் குவிந்தனர். ஆன்மிகத் தலைவரான போலே பாபா தலைமறைவாகிஉள்ள நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில், ஆன்மிகத் தலைவரான போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தனர். இதில், ஏழு குழந்தைகள், ஒரு ஆண் அடங்குவர்; மற்றவர்கள் பெண்கள். இதைத் தவிர, 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2.5 லட்சம் பேர்
ஒரு சிறிய கிராமத்தில் திறந்தவெளியில் நடந்த நிகழ்ச்சியில், இத்தனை பேர் கூடுவர் என்பதை எதிர்பார்க்கவில்லை என, அரசு நிர்வாகம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சியில், 80,000 பேர் வரை பங்கேற்பர் எனக் கூறப்பட்ட நிலையில், 2.5 லட்சம் பேர் குவிந்துள்ளதாகத் தெரிகிறது.
போலே பாபாவின் காலடி மண்ணையும், நிகழ்ச்சி முடிந்து அவர் சென்ற காரால் எழுந்த புழுதியையும், பிரசாதமாக பெறுவதற்காக மக்கள் முண்டியடித்தபோது, ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததில், இந்த கோர சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பாபாவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள், மக்கள் கூட்டத்தை, குச்சிகளை வைத்து தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது அங்கு, 3 அடி ஆழமுள்ள சேற்றுடன் கூடிய தண்ணீர் குட்டையில் விழுந்ததால், பலர் மூச்சுமுட்டி இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு யார், எப்படி அனுமதி அளித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே, 80,000 பேருக்கு அனுமதி அளித்த நிலையில், 100க்கும் குறைவான போலீசாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் போலீஸ் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரியான சூரஜ் பால் சிங், 18 ஆண்டு பணிகளுக்குப் பின், 1999ல் விருப்ப ஓய்வு பெற்று ஆன்மிகத்தில் ஈடுபடத் துவங்கினார்.
தன் பெயரை நாராயண் சாகர் ஹரி என்று மாற்றிக் கொண்டார். அவரை அவருடைய பக்தர்கள், போலே பாபா என்று அழைக்கின்றனர். எப்போதும் வெள்ளைநிற குர்தா, பேன்ட் அணியும் அவருக்கு உத்தர பிரதேசத்தில் தீவிர பக்தர்கள் உள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
அதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தகவல்களை மறைத்தது உள்ளிட்ட பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதில், போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை.
நீதி விசாரணை
எத்தனை பேர் வருவர் என்ற தகவல்களை மறைத்துள்ளனர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஒத்துழைக்கவில்லை, சம்பவத்தைத் தொடர்ந்து சாட்சியங்களை மறைத்துள்ளனர் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது முழு குற்றமும் சாட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீது எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்துள்ளதாக எப்.ஐ.ஆர்., கூறுகிறது.
மாநில போலீசின் உயரதிகாரிகள் சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவத்தில் நிபுணர் குழுவை அமைத்து முழு விசாரணை நடத்த வேண்டும் என, விஷால் திவாரி என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இத்தனையும் நடந்த நிலையில், நீதி விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவர் என, அவர் கூறியுள்ளார்.
மேலும், இதில் சதி ஏதும் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இதன் வாயிலாக எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி எம்.பி.,யான ஆர்.கே.சவுத்ரி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் சதி உள்ளது என்று கூறி, ஹிந்து - முஸ்லிம் பிரச்னையை உருவாக்க முதல்வர் ஆதித்யநாத் முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.