ADDED : ஆக 06, 2024 02:05 AM
தங்கவயல் : தங்கவயல் நகராட்சியின் அடுத்த தலைவர் யார் என கேள்வி எழுந்து உள்ளது.
கர்நாடகாவில் உள்ள தங்கவயல் நகராட்சி உட்பட 61 நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
தங்கவயல் நகராட்சிக்கு தலைவர் பதவிக்கு எஸ்.சி., பெண், துணைத் தலைவர் பதவிக்கு பிற்படுத்தப்பட்டோர் ஏ பிரிவு என அறிவித்துள்ளனர்.
தங்கவயல் நகராட்சியில், முதல் கட்ட இரண்டரை ஆண்டுகளாக காங்கிரசின் தலைவர், துணைத் தலைவர் பதவி காலம், 2023 மே மாதம் முடிவடைந்தது. இதன்பின், 15 மாதங்களாக தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீட்டை, கர்நாடக அரசு அறிவித்துள்ளது. முன்னதாகவே, தங்கவயலில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தகுதியுடைய சிலர் கவுன்சிலர்கள் பதவியை பிடிக்க ஆர்வமாக உள்ளனர். காங்கிரசில் தான் கவுன்சிலர்கள் பலம் அதிகமாக உள்ளது. எனவே, அக்கட்சியே மீண்டும் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிடிப்பது உறுதி.
'தேர்தல் எப்போது நடக்கும்' என, பதவியில் அமர ஆசைப்படுவோர், காத்திருக்கின்றனர். ஆனாலும், எஞ்சிய பதவி காலத்தில் 15 மாதம் வீணாக போய் விட்டதே என்றும் கவலைப்படுகின்றனர்.