UPDATED : ஆக 24, 2024 11:32 PM
ADDED : ஆக 24, 2024 11:26 PM

பெங்களூரு : முதல்வர் சித்தராமையா பதவியில் தொடர முடியாத நிலை உருவானால், அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. நீண்ட காலமாக அந்த நாற்காலி மீது கண் வைத்துள்ள துணை முதல்வர் சிவகுமாருக்கு இப்போதும் அந்த வாய்ப்பு வராது என தோன்றுகிறது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அல்லது பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் அப்பதவியை பெறக்கூடும் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்த விவகாரத்தில் முதல்வர் மீது சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர், கவர்னர் தாவர் சந்த் கெலாட்டிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் முதல்வர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்தார்.
எதிர்க்கட்சிகள் நெருக்கடி
பதவியை ராஜினாமா செய்து, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என, சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ராஜினாமா செய்யமாட்டேன் என சித்தராமையா கூறி வருகிறார்.
கவர்னர் அனுமதியை எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளார். டில்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் வேணுகோபால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கர்நாடகாவுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின், செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, கட்சி மேலிடம் தனக்கு ஆதரவாக இருப்பதாக கூறினார்.
எனினும், சித்தராமையா ஒருவேளை பதவி விலக நேர்ந்தால், அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக அவருடன் மேலிடம் ஆலோசித்ததாக கூறப்பட்டது.
துணை முதல்வர் சிவகுமாரை தவிர யாரை நியமித்தாலும் பிரச்னை இல்லை என சித்துவின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
'அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும்' என சித்தராமையா கூறியதை, மேலிடம் ஏற்றுக் கொண்டதாக ஒரு நிர்வாகி தெரிவித்தார். கவர்னரின் அனுமதிக்கு கோர்ட் தடை விதித்தால் சித்து ராஜினாமா செய்ய தேவையில்லை.
ஆலோசனை
அப்போது அமைச்சரவையை அவர் மாற்றக்கூடும். ஆறு அமைச்சர்களின் செயல்பாடுகள் சரியில்லை. அவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சித்து முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வருக்கு எப்போது நெருக்கடி வந்தாலும், அந்த பதவியை பிடிக்க துணை முதல்வர் சிவகுமார் காய் நகர்த்துவது வழக்கம். இம்முறையும் அவர் டில்லியில் அதற்கான முயற்சிகளை துவக்கியுள்ளார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அவருக்கு போட்டியாக களம் இறங்கி உள்ளார். நேற்று டில்லியில் அவர் வேணுகோபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அவர் தலித் என்பதால் முன்னுரிமை அளிக்க மேலிடம் விரும்புகிறது. வால்மீகி வகுப்பை சேர்ந்த சதீஷ் மீதும் மேலிடத்தின் கனிவு இருப்பதாக தெரிகிறது.