உண்மையான எதிர்க்கட்சி தலைவர் யார்? பா.ஜ.,வினர் இடத்தை பிடித்த குமாரசாமி!
உண்மையான எதிர்க்கட்சி தலைவர் யார்? பா.ஜ.,வினர் இடத்தை பிடித்த குமாரசாமி!
ADDED : செப் 04, 2024 06:17 AM

கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மட்டுமின்றி சில அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது அரசியல் ரீதியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பா.ஜ., -- ம.ஜ.த., தலைவர்கள், ஆளுங்கட்சி குறித்து ஏதாவது விமர்சனம் செய்தால், பல தலைவர்களும், வரிந்து கட்டிக் கொண்டு பதிலடி கொடுக்கின்றனர். ஆனால், பா.ஜ., தரப்பில் ஆளுங்கட்சியை திணறடிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
சரியான பதிலடி
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, மூத்த தலைவர்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், சி.டி.ரவி என ஒரு சிலர் மட்டுமே பதிலடி கொடுத்துப் பேசுகின்றனர்.
இவர்களை விட, ம.ஜ.த.,வை சேர்ந்த, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, ஆளுங்கட்சிக்கு சரியான வகையில் பதிலடி கொடுத்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுப் பேசினால், குமாரசாமி மூன்று விஷயங்கள் குறித்து பதிலடி கொடுக்கிறார்.
இதனால், உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, காங்கிரஸ் அரசை திணறடிக்கும் வகையில், பா.ஜ., தலைவர்கள் தக்க பதிலடி கொடுக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் நடந்த மைசூரு பாதயாத்திரையின் போதும், குமாரசாமி குற்றச்சாட்டுகள் தான், பேசு பொருளாக இருந்தது.
இதனால், காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., தலைவர்கள் மேலும் புள்ளி விபரங்களுடன் பேச வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.
சமரச அரசியல்
சில பா.ஜ., தலைவர்கள், ஆளுங்கட்சியுடன் ஒருங்கிணைந்து சமரச அரசியல் செய்வதாக, அந்த கட்சித் தலைவர்களே அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றனர். நான்கு சுவற்றின் நடுவில் பேச வேண்டிய விஷயங்களை, இப்படி பகிரங்கமாக பேசுவதும், கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் நினைக்காதது கவலைக்குரியது.
எப்போது வேண்டும் ஆனாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம். பொதுவாக, மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் உள்ளதோ, அந்த கட்சி தான் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது.
இதை நீக்கும் வகையில், பா.ஜ., தலைவர்கள் செயல்பட வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் கூறி வருகின்றனர். இப்படியே இருந்தால், ஆளுங்கட்சி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
இதை மனதில் வைத்துக் கொண்டு, தலைவர்கள் செயல்பட வேண்டும். ஒரு கட்சிக்கு, தொண்டர்கள் தான் வேர் என்பதை மறக்கக் கூடாது. தலைவர்கள் பலமாக இருந்தால் மட்டுமே, மற்ற கட்சியினரை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
எனவே, தொண்டர்கள் வெறுக்கும் முன்பு, தலைவர்கள் எச்சரிக்கை அடைந்து, தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லை எனில் அடுத்த தேர்தலில், முடிவுகள் தலைகீழாக மாற்றும் சக்தி, தொண்டர்களுக்கு உள்ளது என்பதை தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வகையில், ஒரு அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியானது, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காண்பித்து, மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், மூடா முறைகேடு, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடுகளை மட்டுமே பா.ஜ.,வினர் சுட்டிக் காண்பித்து போராட்டம் நடத்தி உள்ளனர். அதுவும் பெரிய அளவில் எடுபடவில்லை.
ஐந்து வாக்குறுதித் திட்டங்கள், அளித்த வாக்குறுதிப்படி பெரும்பாலானோருக்கு இன்னும் முழுமையாக செல்லவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் பூஜ்யம். இதை முன்னிறுத்தி, அரசை பணிகள் செய்ய வைக்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
- நமது நிருபர் -