ADDED : ஏப் 27, 2024 10:56 PM
கர்நாடகாவில் முதல்கட்டமாக உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பெங்களூரு ரூரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய 14 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது.
லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., - ம.ஜ.த., காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து ஓட்டு சேகரித்தனர். தினமும் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி செய்வோரிடம் துவங்கி, ரோடு ஷோ நடத்தி, வீடு வீடாக சென்று, இரவு பிரசாரம் முடித்து, கட்சி பிரமுகர்களுடன் மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என பேசி, உறங்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
பந்தயம்
ஓட்டுப்பதிவு முடிந்த பின், முதல்கட்ட லோக்சபா தொகுதிகளில் யார் வெற்றி பெறுவர் என்ற பந்தயம் துவங்கி உள்ளது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், ஓட்டுச்சாவடியில் உள்ள பூத் ஏஜென்டுகள் அளித்த தகவலின்படி அடிப்படையில், அரசியல் கட்சிகள் முடிவுகளை அலசி வருகின்றன.
இந்த தொகுதிகளில் ஓட்டு சதவீதம் அடிப்படையில், பா.ஜ.,வுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரசும் சளைத்ததில்லை என ரீதியில் நம்பிக்கையில் உள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூரு ரூரல், ஹாசன், மாண்டியா, சிக்கபல்லாபூர், துமகூரு ஆகிய தொகுதிகளில், யார் வெற்றி பெறுவர்கள் என்ற பந்தயம் ஜோராக நடந்து வருகிறது.
முக்கிய தொகுதி
குறிப்பாக ம.ஜ.த.,வில் குமாரசாமி போட்டியிடும் மாண்டியா, பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடும் ஹாசன், தேவகவுடாவின் மருமகன் போட்டியிடும் பெங்களூரு ரூரல் தொகுதிகளில் பணம், பொருட்கள் வைத்து பந்தயம் செய்வது நடந்து வருகிறது.
பெங்களூரு ரூரலில் காங்கிரசில் துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் போட்டியிடுகிறார். இவரின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, இத்தொகுதியில் தனது மருமகனை, தேவகவுடா நிறுத்தி உள்ளார்.
சிக்கபல்லாபூரில் பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் சுதாகரும், காங்கிரசின் ரக் ஷா ராமையாவும் மோதுகின்றனர். இங்கு சுதாகருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் ஆரம்பம் முதலே குடைச்சல் கொடுத்து வந்தார்.
துமகூரில் பா.ஜ.,வின் சோமண்ணாவும், காங்கிரசின் முத்தஹனுமேகவுடாவும் போட்டியிடுகின்றனர். இங்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரான மாதுசாமிக்கு சீட் மறுக்கப்பட்டது. இவர், சோமண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை.
இந்த தொகுதிகளில் யார் வெற்றி பெறுவர் என்று வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பந்தயம் வைப்பது அதிகரித்து உள்ளது
- நமது நிருபர் -.

