'இண்டியா' கூட்டணியில் யார் பிரதமர்: 48 மணி நேரத்தில் அறிவிக்குமாம் காங்.,
'இண்டியா' கூட்டணியில் யார் பிரதமர்: 48 மணி நேரத்தில் அறிவிக்குமாம் காங்.,
ADDED : மே 31, 2024 06:59 AM

புதுடில்லி : 'இண்டியா' கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சிக்கே தலைமை பொறுப்பேற்க உரிமை கோரும் தகுதி உள்ளது. 48 மணி நேரத்தில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என, காங்., தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தியானம் செய்யும் கன்னியாகுமரியில் இருந்து தான், 2022, செப்., 7ல் ராகுல் நடைபயணத்தை துவக்கினார். ஓய்வுக்கு பின் வேறு வேலையின்றி தியானம் செய்வதே சிறந்தது. அதை மோடி நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். கடந்த 2004ல் பா.ஜ.,வின், 'இந்தியா ஒளிர்கிறது' பிரசாரத்துக்கு மத்தியில் காங்., வெற்றி பெற்ற வரலாறு, 2024ல் மீண்டும் திரும்ப உள்ளது.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் எங்கள் பக்கம் வர ஆர்வம் காட்டுவர். அவர்களை சேர்த்துக் கொள்வது குறித்து காங்., தலைமை முடிவு செய்யும்.
கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 13ல் அறிவிக்கப்பட்டது. மே 16ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவானது. பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பேச்சு மே 17 முதல் வலம் வர துவங்கியது.
அது உறுதி செய்ய மூன்று நாட்கள் ஆனது. ஆனால், இந்த முறை, தேர்தல் முடிவு வெளியாகி, இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் பிரதமர் யார் என்பதை இண்டியா கூட்டணி தேர்வு செய்து அறிவிக்கும். கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சியே, தலைமை பொறுப்பேற்க உரிமை கோரும் தகுதி உள்ளது. இவ்வாறு கூறினார்.