பிரதமர் மோடிக்கு மாற்று யார்? காங்.,- எம்.பி., சசி தரூர் 'நச்'
பிரதமர் மோடிக்கு மாற்று யார்? காங்.,- எம்.பி., சசி தரூர் 'நச்'
ADDED : ஏப் 03, 2024 11:47 PM

புதுடில்லி: கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில், நான்காவது முறையாக, காங்., மூத்த தலைவரும், அத்தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யுமான சசி தரூர் போட்டியிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவரிடம் சமீபத்தில், 'பிரதமர் மோடிக்கு மாற்று யார்?' என, செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சசி தரூர் அளித்த பதில்:
பிரதமர் மோடிக்கு மாற்றான தனி நபரை அடையாளம் காணும்படி, பத்திரிகையாளர் ஒருவர் மீண்டும் என்னிடம் கேட்டார். பார்லி., அமைப்பில் இந்த கேள்வி பொருத்தமற்றது.
நாம் அதிபர் ஆட்சி முறையைப் போல், ஒரு தனி நபரை தேர்ந்தெடுக்கவில்லை.
மாறாக, நாட்டின் பன்முகத்தன்மை, பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாக்கும் மதிப்புமிக்க கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியைத் தேர்ந்தெடுக்கிறோம்.
மோடிக்கு மாற்றாக, அனுபவம் வாய்ந்த, திறமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்திய தலைவர்கள் குழு உள்ளது.
இந்த குழு தனி நபருக்காக அல்லாமல், மக்களின் பிரச்னைகளுக்குப் பதிலளிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்த குழு எந்த குறிப்பிட்ட நபரை பிரதமராக தேர்வு செய்யும் என்பது இரண்டாவது விஷயம். நம் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது தான், முதன்மையானது.
இவ்வாறு அவர் பதில் அளித்துஉள்ளார்.

