எனது பெற்றோரை ஏன் குறிவைக்கிறீர்கள்?: கெஜ்ரிவால் டென்ஷன்
எனது பெற்றோரை ஏன் குறிவைக்கிறீர்கள்?: கெஜ்ரிவால் டென்ஷன்
UPDATED : மே 23, 2024 06:09 PM
ADDED : மே 23, 2024 05:56 PM

புதுடில்லி: வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை ஏன் குறிவைக்கிறீர்கள்? என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆம்ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இது தொடர்பாக, கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: எனது தாய் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். தந்தைக்கு காது கேட்காது. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோரை ஏன் குறிவைக்கிறீர்கள்?. என்னை அழிக்க பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்.
எனது எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பலரை கைது செய்தனர். ஆனால் நான் பா.ஜ.,வுக்கு தலைவணங்கவில்லை. அவர் என்னை கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். பல வழிகளில் என்னை அழிக்க பிரதமர் மோடி முயன்றார். ஆனால் அவரால் என்னை அழிக்க முடியவில்லை. ஆனால், இன்று அவர் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
மனைவியை புகழ்ந்த கெஜ்ரிவால்
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு கெஜ்ரிவால் அளித்த பேட்டி: டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனக்கு பதவி ஆசை இல்லை. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க சதி நடக்கிறது. என்னை சிறையில் அடைத்தால்
பிரசாரம் பாதிக்கும். எங்கள் கட்சி சிதைந்துவிடும் என பா.ஜ.,வினர் நினைத்தார்கள். ஆனால் கட்சி மேலும் ஒன்றுபட்டது.தேர்தல் பத்திரம் என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்.
அதிர்ஷ்டசாலி
இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும். எனது மனைவி சுனிதா என் வாழ்வில் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டபோதும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். எனக்கும் டில்லி மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக வேலை செய்தார். அவர் தீவிர அரசியலில் ஈடுபட விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

