நடிகர் தர்ஷனை பாதுகாப்பது ஏன்? மத்திய அமைச்சர் ஷோபா கேள்வி!
நடிகர் தர்ஷனை பாதுகாப்பது ஏன்? மத்திய அமைச்சர் ஷோபா கேள்வி!
ADDED : ஜூன் 15, 2024 04:39 AM

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாக நடிகர் தர்ஷன் பிரசாரம் செய்ததால், அவரை ஷாமியானா போட்டு அரசு பாதுகாக்கிறதா,'' என மத்திய இணை அமைச்சர் ஷோபா கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடக காங்கிரஸ் அரசு வந்த பின், யாருக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த அரசு, கொலைகாரர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக, நடிகர் தர்ஷன் பிரசாரம் செய்தார். இதற்காக ஷாமியானா போட்டு, அவரை பாதுகாக்கின்றனரா.
தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையத்துக்கு, பாதுகாப்பு அளித்துள்ளனர். கொலையாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை காப்பாற்ற அரசோ, போலீசாரோ முயற்சிக்க கூடாது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு குறித்து, எனக்கு தெரியவில்லை. ஊடகம் மூலமாக கவனித்தேன். அவரது நீண்டகால அரசியலை, நான் பார்த்துள்ளேன். இந்த விஷயத்தில் அரசின் பங்களிப்பு குறித்து தெரியவில்லை.
எடியூரப்பா மீது எப்போதும், இத்தகைய குற்றச்சாட்டு வந்தது இல்லை. அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுவதை, மக்கள் கவனிக்கின்றனர். காங்கிரஸ் அரசு அனைவரின் மீதும், வழக்கு பதிவு செய்வதையும் கவனிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.

