ஐ.ஏ.எஸ்., பதவி ராஜினாமா ஏன்? எம்.பி., சசிகாந்த் செந்தில் விளக்கம்!
ஐ.ஏ.எஸ்., பதவி ராஜினாமா ஏன்? எம்.பி., சசிகாந்த் செந்தில் விளக்கம்!
ADDED : செப் 03, 2024 11:28 PM

மங்களூரு, : ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்தது என்பதற்கு, காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், 2019ல் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக இருந்தபோது, ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்தார்.
அரசியல்வாதிகளின் அழுத்தம் அல்லது வேறு சில காரணங்களால் அவர் ராஜினாமா செய்து இருக்கலாம் என்று பேசப்பட்டது.
இந்நிலையில் தட்சிண கன்னடாவின் மங்களூரில் நேற்று 'செந்திலுடன் உரையாடல்' என்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்து கொண்ட சசிகாந்த் செந்தில் பேசும்போது, ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணத்தை வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது:
காஷ்மீருக்கு அரசியலமைப்பு சட்டம் 370ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தபோது அதுதொடர்பான செய்திகளை, 'டிவி'யில் நானும், என் மனைவியும் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
அப்போது என்னை பார்த்து, என் மனைவி கேட்டார். 'நீங்கள் கல்லுாரியில் படிக்கும்போது, எவ்வளவு புரட்சியாளராக இருந்தீர்கள். இப்போது உங்கள் புரட்சி எங்கே போனது? கலெக்டராக உள்ள உங்களுக்கு அரசு பங்களா, வாகனம் உள்ளது. நாட்டை பற்றி கவலை இல்லையா?' என்று கேட்டார்.
மனைவி கேட்ட கேள்வியால், என் மனசாட்சி விழித்துக் கொண்டது. அன்று இரவு முழுதும் துாக்க முடியாமல் தவித்தேன். அடுத்த நாளே ஒரு முடிவுக்கு வந்து, ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்தேன்.
ஒரு அதிகாரி என்ற முறையில், அரசியலை உன்னிப்பாக கவனித்தேன். மக்கள் அமைப்பை அழிக்கும் அரசியலை என்னால் சகிக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி என்னை அழைக்கவில்லை. நானே கட்சியில் இணைந்தேன்.
இவ்வாறு அவர்கூறினார்.