பெங்களூரில் வெள்ளம் ஏற்பட்டது ஏன்? ம.ஜ.த., தலைவர் குமாரசாமி ஆவேசம்!
பெங்களூரில் வெள்ளம் ஏற்பட்டது ஏன்? ம.ஜ.த., தலைவர் குமாரசாமி ஆவேசம்!
ADDED : மே 27, 2024 07:36 AM

சேஷாத்திரிபுரம்: ''இரண்டு மூன்று முறை பெய்த மழைக்கே பெங்களூரில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இது 'பிராண்ட் பெங்களூரு' அல்ல, 'லுாட் பெங்களூரு','' என ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
ஜூன் 3ம் தேதி நடக்கும் கர்நாடக மேலவையின் ஆசிரியர், பட்டதாரி தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக பா.ஜ., - ம.ஜ.த., ஒருங்கிணைப்பு கூட்டம், சேஷாத்திரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி பேசியதாவது:
பெங்களூரில் இரண்டு மூன்று மழைக்கே, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இது 'பிராண்ட் பெங்களூரு' அல்ல 'லுாட் பெங்களூரு' ஆகும். காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தது முதல், பெங்களூரில் ஒரு வளர்ச்சி பணியும் நடக்கவில்லை.
மேலவை தேர்தல்
மேலவை தேர்தலை கவுரவ பிரச்னையாக கருத வேண்டும். இதிலும் கூட காங்கிரஸ் பணத்தை வாரி இறைக்கிறது. இது போன்று செலவு செய்ய, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவால் முடியாது.
3 மாதம் பாக்கி
கடந்த மூன்று மாதங்களாக அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 175 ரூபாய் கொடுக்கப்படவில்லை. விவசாய உரம் 70 சதவீதம் உயர்ந்து உள்ளது; ஆனாலும் உரம் கிடைப்பதில்லை.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஓராண்டாகியும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதி திட்டங்களால், வளர்ச்சி பணிகள் நின்று விட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியதாவது:
மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக, லோக்சபா தேர்தலில் பால், தேன் போன்று இரு கட்சியினரும் ஒற்றுமையாக செயல்பட்டோம்.
பா.ஜ.,வுடன் குமாரசாமி கூட்டணி வைத்தபோது, நாடு முழுதும் பேசப்பட்டார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்த போது, அக்கட்சியினர், இவர் முதுகில் கத்தியை வைத்தனர்.
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்திருந்தால், இந்த மோசமான ஆட்சி வந்திருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.

