2 சிறுமியரை கொன்றது ஏன்? வளர்ப்பு தந்தை வாக்குமூலம்!
2 சிறுமியரை கொன்றது ஏன்? வளர்ப்பு தந்தை வாக்குமூலம்!
ADDED : ஆக 25, 2024 10:28 PM
அம்ருதஹள்ளி:
சிறுமியரை வளர்ப்பு தந்தை கொன்ற வழக்கில், அவர்கள் மீதான சந்தேகத்தால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அனிதா, 40. இவரது மகள்கள் சோனியா, 15, திருஷ்டி, 14. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த அனிதா, மகள்களுடன் பெங்களூரு வந்தார். அம்ருதஹள்ளி காவேரி லே - அவுட்டில் வசித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேசத்தின் சுமித், 41 என்பவரை அனிதா இரண்டாவது திருமணம் செய்து, மகள்களுடன் வசித்தார்.
நேற்று முன்தினம் இரவு, அனிதா வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது இரண்டு மகள்களையும் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு சுமித் தப்பினார்.
அம்ருதஹள்ளி போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்கான காரணம் அம்பலமாகி உள்ளது.
சில மாதங்களாக அனிதா, அவரது மகள்களின் நடத்தையில் சுமித்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிறுமியர் இருவரும் வெளியே சென்றால், 'எங்கு செல்கிறீர்கள், யாருடன் செல்கிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார். இதனால், அவரை சிறுமியர் வெறுக்க ஆரம்பித்தனர். மரியாதை கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் அனிதா, இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர்களை சமாதானப்படுத்தி சுமித் அழைத்து வந்தார்.
தனக்கு மரியாதை கொடுக்காததாலும், தன் பேச்சை கேட்காமல் இருந்ததாலும் ஆத்திரத்தில் இரண்டு சிறுமியரையும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடுகின்றனர்.