எடியூரப்பா ராஜினாமா செய்தது ஏன்? விஜயேந்திராவுக்கு சித்து கேள்வி!
எடியூரப்பா ராஜினாமா செய்தது ஏன்? விஜயேந்திராவுக்கு சித்து கேள்வி!
ADDED : ஆக 04, 2024 11:08 PM

பெங்களூரு: 'உங்கள் தந்தை எடியூரப்பா, விதான் சவுதாவில் கண்ணீர் சிந்தியபடி, ராஜினாமா செய்தது ஏன். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவரிடம் விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்தது ஏன்' என, முதல்வர் சித்தராமையா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குறுதி
முதல்வரின், எக்ஸ்' வலைதள பதிவு:
சட்டசபை தேர்தலுக்கு முன், ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்தோம். கொடுத்த வாக்குறுதியை செயல்படுத்தினோம். ஏழைகளுக்கு வீடுகள் வழங்கினோம். ஆனால் பா.ஜ., அரசில், ஏழைகளுக்கு ஒரு வீடு கூட வழங்கப்படவில்லை.
இது குறித்து, பாதயாத்திரை நடத்தும் எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களிடம், மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். பா.ஜ., அரசில் 21 ஊழல்கள் நடந்தன. அடுக்கடுக்கான ஊழல்களால், மாநிலத்தின் பொருளாதாரம் சீர் குலைந்தது.
பொருளாதாரத்தை மேம்படுத்த, நானும், துணை முதல்வர் சிவகுமாரும் முயற்சிக்கிறோம். இதை சகிக்க முடியாமல், எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை நடத்துகின்றனர்.
உங்கள் தந்தை எடியூரப்பா, விதான் சவுதாவில் கண்ணீர் சிந்தியபடி, ராஜினாமா செய்தது ஏன். இதற்கு பதிலளியுங்கள். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவரிடம் விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்தது ஏன் என்பதற்கு, விஜயேந்திரா பதில் அளிக்க வேண்டும்.
நான்கு ஆண்டு பா.ஜ., அரசில், அக்கட்சியினர் செய்த பாவத்தை கழுவிக்கொள்ள தற்போது பாதயாத்திரை நடத்துகின்றனர். ஒன்றல்ல, இரண்டல்ல நுாற்றுக்கணக்கான ஊழல்களை செய்துள்ளனர்.
விசாரணை
இது தொடர்பாக, விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தால், எதிர்க்கட்சியினரில் பலர் சிறைக்கு செல்வர். இத்தகையோர், காங்., அரசின் மீது, ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவது, எந்த விதத்தில் சரியாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.