ADDED : மே 11, 2024 01:26 PM

புதுடில்லி: மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் பா.ஜ.,வை ஆதரித்தோம் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: தெலுங்கானாவில் முதலில் நாங்கள் தான் ஆட்சி அமைத்தோம். இதனால், மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டியிருந்தது.
இதனால், கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது பா.ஜ., எங்களின் ஆதரவை கேட்டது. நாங்களும் ஆதரித்தோம். தெலுங்கானாவில் களத்தில் பா.ஜ., எங்கும் காணப்படவில்லை. அக்கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தெலுங்கானாவில் அக்கட்சி வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு ஆங்கில டிவிக்கு அளித்த பேட்டியில், சந்திரசேகர ராவ் கூறியதாவது: தற்போது நான் உங்களுக்கு கூறுவது ஆச்சர்யமாக இருக்கும். மாநில கட்சிகள் வலுவாகி வருகின்றன. ஒரு சக்தியாக அக்கட்சிகள் உருவெடுத்துள்ளன. அக்கட்சிகள் தேஜ கூட்டணியையோ, ‛ இண்டியா' கூட்டணியையோ ஆதரிக்க போவதில்லை. மாறாக இவ்விரு கூட்டணி தான் மாநில கட்சிகளை ஆதரிக்க போகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.