பிரதமர் மோடி தாடி பற்றி ஏன் கேட்கவில்லை? விஜயேந்திராவுக்கு மது பங்காரப்பா கேள்வி
பிரதமர் மோடி தாடி பற்றி ஏன் கேட்கவில்லை? விஜயேந்திராவுக்கு மது பங்காரப்பா கேள்வி
ADDED : மே 29, 2024 04:59 AM

சித்ரதுர்கா : “பிரதமர் நரேந்திர மோடி, தாடி வளர்த்தது பற்றி ஏன் கேட்கவில்லை,” என, பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, அமைச்சர் மது பங்காரப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடக பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா. நீளமான தலை முடியுடன் வலம் வருகிறார். அவரது தலைமுடி குறித்து விமர்சனம் செய்த, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, 'மது பங்காரப்பா முடி வெட்டி, தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும்' என, கிண்டலாக கூறினார்.
பாவ பணம்
'முடி வெட்ட எனக்கு நேரம் இல்லை. வேண்டும் என்றால் விஜயேந்திரா வந்து வெட்டிவிடட்டும்' என, மது பங்காரப்பாவும் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், கலபுரகியில் விஜயேந்திரா நேற்று அளித்த பேட்டியில், “முடிவெட்ட பணம் இல்லை என்றால், பா.ஜ., இளைஞர் அணியினரிடம் சொல்லி, பணம் அனுப்பி வைக்கிறேன்,” என்றார்.
இதற்கு பதிலளித்து சித்ரதுர்காவில் மது பங்காரப்பா அளித்த பேட்டி:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நிறைய முடி வளர்த்தார். கொரோனா நேரத்தில் பிரதமர் மோடி, நீண்ட தாடி வளர்த்தார். இதுபற்றி விஜயேந்திரா ஏன் கேட்கவில்லை? முடி வெட்டுவதற்கு பணம் அனுப்புவதாக, அவர் கூறுகிறார். 40 சதவீத கமிஷன் மூலம் பெறப்பட்ட, பாவ பணத்தில் என் முடியை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.
ரோல் மாடல்
என் முடி நன்றாக இருக்கிறது. என் தலைக்குள் மூளை உள்ளது. பா.ஜ.,வினரைப் போல் நான் முட்டாள் இல்லை. தந்தையின் கையெழுத்தைபோடும், நபர் நான் இல்லை. எனக்கு என் தந்தை நல்ல புத்தி சொல்லித்தந்து வளர்த்தார்.
என் ஹேர் ஸ்டைல், என் தந்தைக்கு பிடிக்கும். ஒரு முறை, நான் முடி வெட்டியதால், என்னிடம் அவர் பேசவில்லை. என் அப்பா தான், எனக்கு ரோல் மாடல்; விஜயேந்திரா இல்லை.
சட்டசபை தேர்தலின்போது துணை முதல்வர் சிவகுமாரின் தாடி பற்றி பேசியதால், பா.ஜ., 105ல் இருந்து 66க்கு வந்தது. இப்போது என் முடியை பற்றி பேசி உள்ளனர். லோக்சபா தேர்தலில் 25ல் இருந்து 5க்கு வருவர். என் தலை, என் முடி, நான் வளர்க்கிறேன். அவருக்கு என்ன பிரச்னை?
இவ்வாறு அவர் கூறினார்.