ADDED : ஏப் 12, 2024 05:45 AM

பெங்களூரு: ''ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்த சுவாமி, அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானவர். மடத்திற்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார். சில காரணங்களால் செல்ல முடியவில்லை,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்த சுவாமியிடம் குமாரசாமி, டாக்டர் மஞ்சுநாத் ஆசி பெற்று இருந்தால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் முதல்வர் பதவியில் இருந்து, தன்னை இறக்கியவர்களுடன் சென்று மடாதிபதியை, குமாரசாமி சந்தித்து உள்ளார்.
ஒக்கலிகர் சமூகத்திற்கு, அவர் என்ன செய்தி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. 'காங்கிரசார் கவுரவர்கள். நாங்கள் பாண்டவர்கள். மஹாபாரத போரின் போது, பாண்டவர்களை கிருஷ்ணர் ஆதரித்தார். அதுபோல ம.ஜ.த.,வுக்கு, மடாதிபதி நிர்மலானந்த சுவாமி ஆதரவு அளிப்பார்' என்று, ம.ஜ.த.,வினர் கூறுவதை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மடாதிபதி அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானவர். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. மடத்திற்கு வரும்படி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார். சில காரணங்களால் செல்ல முடியவில்லை. ஆனால் அமைச்சர்கள் செலுவராயசாமி, கிருஷ்ணபைரே கவுடா தலைமையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர், மடத்திற்கு சென்று வந்தனர்.
கர்நாடகாவில் ம.ஜ.த., கட்சி முடியும் நிலைக்கு சென்று விட்டது. அந்த கட்சி இருக்க வேண்டும் என்று, நாங்கள் விரும்புகிறோம். ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்து, நாங்கள் தவறு செய்கிறோம். இப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, ம.ஜ.த., தவறு செய்து உள்ளது.
ஒக்கலிகர்கள், லிங்காயத்துகள் உட்பட அனைத்து சமூகத்தினரும் அறிவாளிகள். யாரும் முட்டாள்கள் இல்லை.
மாநிலத்தில் இருக்கும் அரசு மூலம், நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று தான், மக்கள் எதிர்பார்ப்பர். மக்களுக்கான தேவையை நிறைவேற்ற, காங்கிரசால் மட்டும் தான் முடியும்.
ஷிவமொகாவில் பிரதமர் மோடி, பிரசாரம் செய்த போது, எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கவில்லை. வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் கேட்டார்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், அவரது தொகுதியில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, எங்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார். அவரை இன்னும் எங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. இன்னும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
அரசின் மீது குற்றச்சாட்டு சொல்லும் முன்பு, மத்திய அரசு வறட்சி நிவாரணம் தராதது பற்றி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேச வேண்டும். வறட்சி நிவாரணம் பற்றி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு, பதில் அளிக்கட்டும்.
முதல்வர் பதவியில் இருந்து பா.ஜ., மேலிடம் இறக்கிவிட்ட போது, கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பதற்கு, எடியூரப்பா முதலில் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

