பெங்களூரை கவனிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷோபா கோபம்
பெங்களூரை கவனிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷோபா கோபம்
ADDED : ஜூலை 08, 2024 06:36 AM

பெங்களூரு: ''முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் நகரின் எந்த வார்டுகளுக்கும் செல்வதில்லை,'' என மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ஷோபா குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டங்கள் நின்றுள்ளன. சித்தராமையா அரசு, உட்கட்சி பூசலால் மக்களை மறந்துள்ளது.
பெங்களூரு உட்பட மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு அரசு தீர்வு காணவில்லை. அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. இந்த அரசிடம் எதை சொல்லியும் பயன் இல்லை. பாறையில் நீர் ஊற்றியது போன்றாகிறது.
இந்த அரசில் யார் முதல்வர், துணை முதல்வராக இருக்க வேண்டும் என்பதில், பெரிய மோதல் நடக்கிறது. கர்நாடகாவில், அரசு உள்ளது என்பதையே, மக்கள் மறந்துள்ளனர். கொலைகள், பாலியல் வன்முறைகள், கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. அரசிடம் கேள்வி எழுப்புவோர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது முதல்வர் விழித்து கொண்டு, மக்களை பாதுகாக்க வேண்டும்.
கர்நாடகாவில் டெங்குவுடன், ஜிகா வைரஸ் தென்பட்டுள்ளது. மக்கள் மருத்துவமனைகளில் சேர்கின்றனர். மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. மாநில அரசு டெங்கு பரிசோதனைக்கு, கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதை யாரும் பின்பற்றுவது இல்லை.
பெங்களூரில் டெங்கு இறப்புகள் அதிகரிக்கின்றன. சுகாதாரத்துறை செயல் இழந்துள்ளது. எந்த பணிகளும் முடியவில்லை. பணிகள் பாதியில் நின்றுள்ளன. மழையினால் தண்ணீர் தேங்குகிறது. இது கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க காரணமாகிறது. குடிநீர் வாரியம் சரியாக செயல்படவில்லை.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் நகர்வலம் செல்லவில்லை. கொசுக்கள் அதிகரிக்கும் இடங்களை பார்வையிடவில்லை. பெங்களூரில் மார்ஷல்கள் உள்ளனர். இவர்கள் பணம் வசூலிப்பதில் ஈடுபடுகின்றனரே தவிர, மக்களுக்காக பணியாற்றுவது இல்லை. பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் நகரின் எந்த வார்டுகளுக்கும் செல்வதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.