காங்கிரசார் சொம்புடன் அலைவது ஏன்? பா.ஜ., ரவி கிண்டல் விளக்கம்!
காங்கிரசார் சொம்புடன் அலைவது ஏன்? பா.ஜ., ரவி கிண்டல் விளக்கம்!
ADDED : மே 02, 2024 06:40 AM

கொப்பால்: ''பிரதமர் நரேந்திர மோடி பெயரை கேட்டால், காங்கிரசாருக்கு வயிற்றுப்போக்கு அதிகரிக்கிறது. இதனால் கையில் சொம்புடன் அலைகின்றனர்,'' என, பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் ரவி தெரிவித்தார்.
கொப்பாலில் நேற்று அவர் கூறியதாவது:
இம்முறை லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக மக்கள் இருப்பதை கண்டு, காங்கிரசார் வயிறு எரிகின்றனர். மக்கள் 'மோடி, மோடி' என கோஷமிடுவதை கேட்டால், காங்கிரசாருக்கு வயிற்றுப்போக்கு அதிகரிக்கிறது. எனவே கையில் எடுத்துச் செல்லும் சொம்பை, கீழே வைப்பது இல்லை.
தொழிலாளர்களின் கையில், நாட்டின் எதிர்காலம் உள்ளது. பிரதமர் மோடி தன்னை 'தலைமை சேவகன்' என, கூறியுள்ளார். மக்களுக்கு சேவை செய்வதே, அவரது குறிக்கோள். ஒரு நாளும் விடுமுறை எடுக்காமல், ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்துகிறார். இம்முறை மீண்டும் அவர் பிரதமராக வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.
நாட்டின் உள்ளேயும், வெளியிலும் மக்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்துள்ளார். இந்தியா தற்போது பொருளாதாரத்தில் வலுவடைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது; வேலை வாய்ப்பும் அதிகரிக்கிறது.
கடந்தாண்டு நாட்டில் 2.17 கோடி வாகனங்கள் விற்பனையாகின. இது பெரிய சாதனை. இந்தியர்கள் கவுரவத்துடன் வாழ வேண்டும் என்பது, மோடியின் எண்ணம். வளர்ச்சி அடைந்த, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவது எங்களின் நோக்கம். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மீது மோடிக்கு சிறப்பு அக்கறை உள்ளது.
ஆடு தொடாத கீரை இல்லை, காங்கிரஸ் தொடாத ஊழல் இல்லை. ஆனால் புதிய திட்டங்கள் மூலமாக, மோடி, நாட்டை முன்னேற்றியுள்ளார். பொருளாதார வளர்ச்சியில், ஜப்பான், ஜெர்மனை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்தியா தலை குனியக்கூடாது. வெளிநாடுகளின் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
காங்கிரசுக்கு கொள்கை, கோட்பாடு இல்லை. பிரதமர் வேட்பாளர் பெயரை கூற, காங்கிரசார் அஞ்சுகின்றனர். தேர்தலில் கார்கேவின் மருமகனை வெற்றி பெற வைக்க, முயற்சி நடக்கிறது. அந்த கட்சியினருக்கு சாதனை பலம் இல்லை.
பொய்யும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். மாநிலத்துக்கு சொம்பு கொடுத்ததாக, அவப்பிரசாரம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

