பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்யாதது ஏன்? முன்னாள் மத்திய அமைச்சர் விளக்கம்!
பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்யாதது ஏன்? முன்னாள் மத்திய அமைச்சர் விளக்கம்!
ADDED : மே 24, 2024 12:24 AM

புதுடில்லி, 'லோக்சபா தேர்தலில் ஏன் ஓட்டளிக்கவில்லை. கட்சிக்காக ஏன் பிரசாரம் செய்யவில்லை?' என்று, பா.ஜ., அனுப்பியுள்ள விளக்க நோட்டீசுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதில் அனுப்பியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார். அவருடைய மகனான ஜெயந்த் சின்ஹா, ஜார்க்கண்டில் இரண்டு முறை எம்.பி.,யாக இருந்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.
இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்பதை உணர்ந்து, கடந்த மார்ச் மாதம், கட்சித் தலைவர் நட்டாவுக்கு, ஜெயந்த் சின்ஹா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், தனக்கு நேரடி தேர்தல் பணிகள் வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஜார்க்கண்டில் உள்ள அவருடைய ஹசாரிபாக் தொகுதிக்கு, மனிஷ் ஜெய்ஸ்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கட்சியின் ஜார்க்கண்ட் பொதுச் செயலர் ஆதித்ய சாகு, விளக்க நோட்டீஸ் ஒன்றை ஜெயந்த் சின்ஹாவுக்கு அனுப்பியுள்ளார். அதில், லோக்சபா தேர்தலின்போது ஏன் ஓட்டளிக்கவில்லை என்றும், கட்சிக்காக ஏன் பிரசாரம் செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து, பதில் கடிதத்தை ஜெயந்த் சின்ஹா அனுப்பியுள்ளார். சமூக வலைதளத்தில் அதை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இந்த விளக்க நோட்டீஸ் ஆச்சரியமாக உள்ளது. மேலும், அதை சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளீர்கள். அதனால், இந்த பதிலையும் சமூக வலைதளத்தில் வெளியிடுகிறேன்.
வெளிநாடு செல்லவிருந்ததால், தபால் ஓட்டு போட்டேன். கட்சியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். என் தொகுதிக்கும், நாட்டுக்கும், கட்சிக்கும் உரிய பங்களிப்பை அளித்துள்ளேன் என்று நம்புகிறேன்.
நேரடி தேர்தல் பணிகளை ஒதுக்க வேண்டாம் என்று கட்சித் தலைவர் நட்டாவிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். என் தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவித்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
தேர்தல் பிரசாரத்துக்கு வரும்படியோ அல்லது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படியோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. பிரசாரம் செய்யும்படி யாரும் கேட்கவில்லை. அதனால், பிரசாரத்தில் நான் ஈடுபடவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.