உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? காங்., அரசுக்கு குமாரசாமி கண்டனம்!
உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? காங்., அரசுக்கு குமாரசாமி கண்டனம்!
ADDED : செப் 17, 2024 05:42 AM

பெங்களூரு,: ''ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாதது ஏன்,'' என மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் அரசை சாடினார்.
சர்வதேச ஜனநாயக தினத்தை ஒட்டி, ஜனநாயகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பீதர் முதல் சாம்ராஜ்நகர் வரை 31 மாவட்டங்களை இணைக்கும் வகையில், 2,500 கி.மீ., துாரத்துக்கு நேற்று முன்தினம் மனித சங்கிலி அமைக்கப்பட்டது.
இது குறித்து, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்ற அக்கறையே அரசுக்கு இல்லை. அக்கறை இருந்திருந்தால், முதலில் உள்ளாட்சி தேர்தல் நடத்தட்டும். ஆட்சிக்கு வந்த நாள் முதல், ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாதது ஏன். உள்ளாட்சி அமைப்புகளின் கழுத்தை நெரித்து, நீங்கள் விதான் சவுதாவில் ஜொலிக்கிறீர்கள்.
சித்தராமையா அதிகாரத்துக்கு வந்து, ஒன்றரை ஆண்டு ஆகிறது. இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஜனநாயகம், மக்கள் நலன் என்று வெறும் விளம்பரங்களில் மட்டுமே உள்ளது. பிரசாரம் மட்டுமே அதிகம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்புக்கு முடிவு கட்டுவதே உங்கள் செயல்பாடா.
மனித சங்கிலி அமைப்பதன் மூலம், ஜனநாயகத்தை காக்க முடியுமா. மக்களின் வரி பணம் விரயம் செய்ய வேண்டுமா. முதலில் உள்ளாட்சி தேர்தலை அறிவியுங்கள். உண்மையான ஜனநாயகத்தை பலப்படுத்துங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.