சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்காதது ஏன்? சாமனுார் குடும்பத்துக்கு வினய்குமார் கேள்வி!
சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்காதது ஏன்? சாமனுார் குடும்பத்துக்கு வினய்குமார் கேள்வி!
ADDED : ஆக 12, 2024 07:24 AM

தாவணகெரே: ''முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. அவருக்கு ஆதரவாக சாமனுார் சிவசங்கரப்பா குடும்பம் நிற்கவில்லை,'' என்று, காங்கிரசில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட வினய்குமார் குற்றம் சாட்டினார்.
தாவணகெரே முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் வினய்குமார் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் தாவணகெரேயில் போட்டியிட, குருபர் சமூகத்தை சேர்ந்த எனக்கு சீட் வாங்கி கொடுக்க, முதல்வர் சித்தராமையா முயற்சி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் சாமனுார் சிவசங்கரப்பா குடும்பம் செய்த சூழ்ச்சியால், எனக்கு சீட் கிடைக்கவில்லை.
இதில் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை. தாவணகெரேயில் பிரபா மல்லிகார்ஜுன் வெற்றி பெற, சித்தராமையா கடுமையாக உழைத்தார்.
பிரபாவுக்கு கிடைத்த அஹிந்தா சமூகத்தின் ஓட்டுகள், முதல்வரால் கிடைத்தது. இப்போது அஹிந்தா சமூகத்தை, சாமனுார் சிவசங்கரப்பா குடும்பம் புறக்கணிக்கிறது. முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, பெரிய அரசியல் சதி நடக்கிறது. முதல்வருக்கு, கவர்னர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து, லோக்சபாவில் பிரபா மல்லிகார்ஜுன் பேசி இருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை.
மைசூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த மாநாட்டில் சாமனுார் சிவசங்கரப்பா கலந்து கொள்ளவில்லை. தாவணகெரேயில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில், அமைச்சர் மல்லிகார்ஜுன் கலந்து கொள்ளவில்லை. சித்தராமையாவுக்கு ஆதரவாக சாமனுார் சிவசங்கரப்பா குடும்பம் நிற்கவில்லை. இனியாவது அந்த குடும்பத்தை பற்றி, அஹிந்தா சமூகத்தினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலில் தாவணகெரேயில் போட்டியிட காங்கிரஸ் சீட் கிடைக்காததால், வினய்குமார் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

