ADDED : ஏப் 21, 2024 01:59 AM

மால்டா :“பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., அமைச்சர்கள் விரிவான பிரசாரங்களை மேற்கொள்ளவே, லோக்சபா தேர்தலை, ஏழு கட்டங்களாக தலைமை தேர்தல் கமிஷன் நடத்துகிறது,” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மால்டா உத்தர் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பிரசூன் பானர்ஜியை ஆதரித்து, கஜோல் நகரில் அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும், சிறப்பு விமானங்கள் வாயிலாக நாடு முழுதும் சென்று பிரசாரம் செய்ய வசதியாக ஏழு கட்டங்களாக தலைமை தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்துகிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில், மே மாதமே ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. ஆனால், இந்த ஆண்டு ஜூன் வரை நடக்கிறது.
பா.ஜ., தலைவர்களோ சிறப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உட்பட நவீன வசதியுடன் சொகுசாக பிரசாரம் மேற்கொள்கின்றனர். கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்படுகின்றனர். மோடி அரசின் கட்டளைப்படி தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.
இண்டியா கூட்டணிக்கு அந்த பெயரை நான்தான் சூட்டினேன். மேற்கு வங்கத்தில் அந்த கூட்டணி இல்லை. எங்களை பொறுத்தவரை அது மாநிலத்துக்கு வெளியேதான். ராமர் கோவில் கட்டியதையும், அதிக கோவில்கள் கட்டியதையும் பா.ஜ., பெருமையாக பேசுகிறது. உண்மையிலேயே அதிக கோவில்களை கட்டியது திரிணமுல் காங்கிரஸ் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
