நான் ஏன் ராஜினாமா செய்யணும் காங்., - எம்.பி., குமார் நாயக் அடம்
நான் ஏன் ராஜினாமா செய்யணும் காங்., - எம்.பி., குமார் நாயக் அடம்
ADDED : பிப் 28, 2025 05:59 AM

ராய்ச்சூர்: முதல்வர் சித்தராமையா தனது மனைவி பார்வதிக்கு, முடாவில் இருந்து 14 வீட்டுமனை வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
முதல்வர், அவரது மனைவி உட்பட 4 பேர் குற்றமற்றவர்கள் என்று 'பி' அறிக்கை தாக்கல் செய்தனர்.
'தற்போதைய ராய்ச்சூர் எம்.பி., குமார் நாயக், மைசூரு கலெக்டராக இருந்த போதுதான், சித்தராமையா மனைவி பார்வதிக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் குளறுபடி நடந்ததாகவும், குமார் நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் அலட்சியம் காட்டியதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று லோக் ஆயுக்தா அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
எனவே குமார் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறினார்.
இதுகுறித்து குமார் நாயக், ராய்ச்சூரில் நேற்று அளித்த பேட்டி:
முடா வழக்கை சட்டப்படி சந்திப்பேன். இதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. முதல்வர் மனைவிக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பான வழக்கு 20 ஆண்டுகள் பழமையானது.
அந்த வழக்கை பா.ஜ., அரசியலாக்க பார்க்கின்றது. கையகப்படுத்தும் நிலத்தை எந்த நேரத்திலும் விடுவிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
இந்த நடைமுறை, கர்நாடகாவில் மட்டும் இல்லை; அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.
விசாரணைக்கு ஆஜராகும்படி லோக் ஆயுக்தாவிடம் இருந்து எனக்கு சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் எனது வக்கீலுடன் ஆலோசிப்பேன்.
விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன். ராய்ச்சூர் மக்கள் என்னை எம்.பி.,யாக தேர்வு செய்தனர்.
இந்த மக்களுக்கு நான் எந்த துரோகமும் செய்யவில்லை. இதனால், எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

