அமைச்சர் தொகுதியில் தோல்வி ஏன்? காங்., தலைவர்களிடம் ராகுல் கேள்வி
அமைச்சர் தொகுதியில் தோல்வி ஏன்? காங்., தலைவர்களிடம் ராகுல் கேள்வி
ADDED : ஜூன் 08, 2024 04:54 AM

பெங்களூரு : “லோக்சபா தேர்தலில், அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக இருக்கும் பெரும்பாலான தொகுதிகளில் ஏன் வெற்றி பெறவில்லை?” என, கர்நாடக காங்., தலைவர்களிடம், அக்கட்சி எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பினார்.
டில்லியில் இருந்து, விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் எம்.பி., ராகுலை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட மூத்த அமைச்சர்கள், நேற்று காலை வரவேற்றனர்.
அங்கிருந்து, அரண்மனை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின், ஒரு வழக்கில், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முக்கிய ஆலோசனை
அங்கிருந்து நேராக குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, தோல்வியடைந்த வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது, “பெரும்பாலான அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக உள்ள தொகுதியிலேயே காங்கிரஸ் தோல்வி அடைந்தது ஏன்?” என, தலைவர்களிடம் ராகுள் கேள்வி எழுப்பினர். ஆலோசனைக்கு பின், ஊடகத்தினருடன் ராகுல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவசரமாக கிளம்பிவிட்டார்.
இதனால், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
மாநிலத்தின், 28 வேட்பாளர்களுடன், ராகுல் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் வெற்றி பெற்ற, ஒன்பது பேருக்கு வாழ்த்து கூறினார். எம்.பி.,யாக எப்படி செயல்பட வேண்டும் என்பதை விளக்கினார்.
பெங்களூரு, டில்லியை விட, அந்தந்த தொகுதி மக்களுடன் அதிக தொடர்பில் இருக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், அரசின் உதவியை பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
அதிக தொடர்பு
இதற்கு முன்பு இருந்த எம்.பி.,க்களில், ஒருவரை தவிர, மற்றவர்கள் மாநிலத்துக்காக பார்லிமென்டில் குரல் கொடுக்கவில்லை. மேகதாது, கலசா பண்டூரி, பத்ரா மேலணை, மாநில வரி பங்கு, நிதி ஆணையத்தின் நிதி பங்கு உட்பட வெவ்வேறு திட்டங்களில், கர்நாடகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.
தோல்வியடைந்தாலும், மக்கள் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றார். பின், சில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, உங்கள் தொகுதியில் ஏன் வெற்றி பெறவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இன்னும், ஐந்தாறு தொகுதிகளில் வெற்றியை எதிர்பார்த்தோம்.
பின்னடைவு ஏற்பட்ட தொகுதிகளில், காரணம் கண்டுபிடித்து சரி செய்து கொள்ளுங்கள் என்று ராகுல் கூறினர்.
நீதிக்கு தலை வணங்கி, அவர், நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இவ்வாறு அவர் கூறினார்.