வக்கீல் ஜீவா தற்கொலையில் பெண் டி.எஸ்.பி., கைது ஏன்?
வக்கீல் ஜீவா தற்கொலையில் பெண் டி.எஸ்.பி., கைது ஏன்?
ADDED : மார் 12, 2025 11:24 PM

பெங்களூரு : பெண் வக்கீல் ஜீவா தற்கொலையில், பெண் டி.எஸ்.பி., கனகலட்சுமி கைது செய்யப்பட்டற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., ஆட்சியில் சமூக நலத்துறையின் போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் பெண் வக்கீலும், தொழில் முனைவருமான ஜீவா, 34, விசாரிக்கப்பட்டார்.
விசாரணைக்குப் பின் தன் வீட்டில், கடந்த நவம்பர் 22ம் தேதி துாக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். விசாரணை அதிகாரி கனகலட்சுமி, தன்னை அரை நிர்வாணமாக்கி விசாரித்ததுடன், வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சமாக 25 லட்சம் ரூபாய் கேட்டார் என, தற்கொலைக்கு முன்பு அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையடுத்து கனகலட்சுமி மீது வழக்குப்பதிவானது. வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 3வது முறையாக விசாரணைக்கு வந்த கனகலட்சுமி திடீரென கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியது:
ஜீவாவிடம் விசாரணை நடத்தியபோது, வாக்குமூலத்தை கனகலட்சுமி வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
அந்த வீடியோவில் சில இடங்கள், வெட்டி திருத்தப்பட்டுள்ளன. இதுபற்றி சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கேட்டபோது, கனகலட்சுமி மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கில் 32 பேரிடம் விசாரிக்கப்பட்டது. அவர்களில் 15 பேர், கனகலட்சுமிக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மீதம் 17 பேர் எதிராக கூறி உள்ளனர்.
தவிர ஜீவாவிடம், கனகலட்சுமி லஞ்சம் கேட்டதற்கான, சில ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.