தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை: காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு
தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை: காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு
UPDATED : ஆக 13, 2024 09:23 AM
ADDED : ஆக 13, 2024 09:10 AM

சென்னை: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று 120 அடியை எட்டி நிரம்பியது. இந்த ஆண்டில், ஜூலை 30க்கு பின்னர் மீண்டும் 2வது முறையாக, அணை நிரம்பியுள்ளது. இன்று நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியில் இருந்து 45,500 கனஅடியாக உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 120.41 அடியாக உள்ளது. பாசன தேவைக்காக விநாடிக்கு 35,550 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
உடுமலை அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் வைகை அணை நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்தது. அணைக்கு வரும் நீர்வரத்து 2,708 கனஅடியாக உள்ளது. தற்போது மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59.50 அடியை எட்டியுள்ளது.
சோத்துப்பாறை அணை
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணைக்கான நீர்வரத்து 226 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் மழை இருக்கும் என்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், தமிழகத்துக்கு இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ளம்
வேலூரில் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. காட்பாடி சாலை, வி.ஜி.ராவ் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து வினாடிக்கு 42,000 கன அடியாக அதிகரித்தது. ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

