ADDED : மார் 22, 2024 07:05 AM

ராய்ச்சூர்: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால், கணவரின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராய்ச்சூரின் சிங்கனோடி கிராமத்தில் வசித்தவர் ராஜு நாயக், 38. இவரது மனைவி சினேகா, 36. தம்பதிக்கு இரண்டு மகன்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கனோடி கிராமத்தில், கோவில் கட்டுமான பணிகள் நடந்தன.
கட்டட தொழிலாளியாக வேலை செய்த, மஹாராஷ்டிராவை சேர்ந்த பாபுவுக்கும், சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.
இதுபற்றி ராஜு நாயக்கிற்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி மனைவியை கண்டித்தார். ஆனால் சினேகா கேட்கவில்லை. இதனால் கணவன், மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வாயில் நுரைதள்ளிய நிலையில், ராஜு நாயக் இறந்து கிடந்தார். அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்து விட்டதாக, சினேகா அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.
ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த உறவினர்கள், யலப்பனதினி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரித்த போது, கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால், மதுவில் துாக்க மாத்திரை கலந்து கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்து கொன்றதை, சினேகா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

