ADDED : ஆக 03, 2024 11:05 PM

கலபுரகி: வரதட்சணை கேட்டு, அடித்துத் துன்புறுத்துவதாக ஏட்டு மீது, மனைவி புகார் அளித்துள்ளார்.
விஜயபுராவின் கலகேரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் ரேவண சித்தப்பா, 33. இவரது மனைவி ஜெகதேவி, 28. தம்பதிக்கு ஒன்றரை வயதில், ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜெகதேவி, ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சில மாதங்களாக, தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. மனைவி சமீபத்தில் கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு, கலபுரகியின், ஜமகன்டி கிராமத்தில் உள்ள, தன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
வரதட்சணை கேட்டு, தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாக, மனைவி ஜெகதேவி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக, கலபுரகியின் ஜமகன்டி கிராமத்தின் யட்ராமி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரில், 'என் கணவர் ரேவண சித்தப்பா, என் தாய் வீட்டில் இருந்து, வரதட்சணை வாங்கி வரும்படி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். இவரது தம்பியின் சிறுநீரகம் பழுதடைந்ததால், அவருக்கு சிறுநீரகம் தரும்படி என்னை கட்டாயப்படுத்துகிறார்' என கூறியுள்ளார்.
இவரது புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மனைவியின் குற்றச்சாட்டை, ரேவண சித்தப்பா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தியதாக கூறும், என் மனைவியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. என் தாய், தந்தையை விட்டு விட்டு தனிக்குடித்தனம் போகலாம் என, என் மனைவி எனக்கு தொல்லை கொடுக்கிறார். நான் சம்மதிக்கவில்லை.
புத்திமதி கூறியும் அவர் திருந்தவில்லை. தினமும் என்னுடன் சண்டை போடுவார். அன்று தன் தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றார்.
நானே காரில் அழைத்துச் சென்று, அவரது தாய் வீட்டில் விட்டு வந்தேன். அதன்பின் அவர், எங்கள் வீட்டுக்கு வரவே இல்லை.
நான் விவாகரத்து கேட்டு, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளேன். மனு, விசாரணையில் உள்ளது. ஒன்றரை வயது மகளை என்னிடம் தரும்படி கேட்டும், மனைவி தரவில்லை. இப்போது என் மீதேகுற்றம்சாட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.