ADDED : மார் 04, 2025 04:47 AM
கலபுரகி: மனைவியின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகமானதால் வெறுப்படைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கலபுரகி நகரின் மஹாதேவநகரில் வசித்தவர் ராகேஷ், 30. நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கும், மேக்னா, 25, என்பவருக்கும் திருமணம் நடந்தது. மேக்னா அடாவடி குணம் கொண்டவராக இருந்தார். சிறு விஷயங்களுக்கும் கூட கணவருடன் தகராறு செய்தார். தன் சொற்படியே நடக்க வேண்டுமென, பிடிவாதம் பிடித்தார்.
அது மட்டுமின்றி, தினமும் வீடு துடைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்யும்படி கணவருக்கு தொல்லை கொடுத்தார். வீட்டு வேலை செய்யாவிட்டால், போலீசாரிடம் பொய்ப்புகார் அளிப்பதாகவும் மிரட்டினார்.
மனைவியின் இம்சையால் மனம் வெறுத்த ராகேஷ், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மேக்னா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலபுரகி போலீஸ் நிலையத்தில், ராகேஷின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.