சித்ரவதை புகார் அளித்த மனைவி கணவர் குடும்பம் தலைமறைவு
சித்ரவதை புகார் அளித்த மனைவி கணவர் குடும்பம் தலைமறைவு
ADDED : மார் 05, 2025 11:13 PM
ஷிவமொக்கா: பெண் குழந்தை பிறந்ததால், மனைவியை கடுமையாக தாக்கிய கணவரையும் அவர் குடும்பத்தினரையும் போலீசார் தேடுகின்றனர்.
ஷிவமொக்கா, ஹொசநகரின், அரசாளு கிராமத்தை சேர்ந்தவர் கிரண் டிசோசா, 35. இவரது மனைவி சுனிதா, 28. இவர் கருவுற்றார். ஆண் குழந்தை பிறக்கும் என, கிரண் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.
கடந்த மாதம் சுனிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் கோபமடைந்த கிரண் டிசோசா, மனைவியையும், பெண் குழந்தையையும் வெறுத்து ஒதுக்கினார்.
கிரணின் தாய் மற்றும் சகோதரியின் துாண்டுதலின்படி, மனைவியை மனம் போனபடி தாக்கி, சித்ரவதை செய்தார். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார். பெண் குழந்தையின் கால்களை பிடித்து, தரையில் அடித்து கொலை செய்யவும் முயற்சித்தார்.
பிப்ரவரி 2ம் தேதி, கிராமத்தின் தேவாலயத்துக்கு சென்று, பிரார்த்தனை செய்த சுனிதா, வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை கணவரும், மாமியாரும் நடுரோட்டில் நிற்க வைத்து கடுமையாக தாக்கினர்.
பலத்த காயமடைந்த சுனிதாவை, அவரது தம்பி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின் தீவிர சிகிச்சைக்காக ஷிவமொக்காவின் மெக்கான் மருத்துவமனையில் சுனிதா அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின், குணமடைந்து வரும் சுனிதா, தன்னை தாக்கி, குழந்தையை கொல்ல முயற்சித்த கணவர், மாமியார், நாத்தனார் மீது ரிப்பன்பேட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். புகார் பதிவானதும் கிரண் டிசோசா, தன் தாய், சகோதரியுடன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.