'பிரெஞ்ச் பிரை' வாங்கி தராத கணவர் மீது மனைவி வழக்கு
'பிரெஞ்ச் பிரை' வாங்கி தராத கணவர் மீது மனைவி வழக்கு
ADDED : ஆக 24, 2024 01:50 AM
பெங்களூரு: 'பிரெஞ்ச் பிரை' வாங்கித் தராத கணவர் மீது மனைவி தொடுத்த வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர், தன் மனைவியுடன் அமெரிக்காவில் வசித்தார். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், பெங்களூருக்கு அழைத்து வந்தார். குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த சில நாட்களில், 'பிரெஞ்ச் பிரை' வாங்கி வரும்படி கணவரிடம், மனைவி கேட்டார். 'குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பிரெஞ்ச் பிரை சாப்பிடுவது சரியாக இருக்காது' என கூறி, கணவர் மறுத்துள்ளார்.
கோபமடைந்த மனைவி, கணவர் மீது போலீசில் புகார் செய்தார். மனைவியை கொடுமைப்படுத்தியதாக வழக்குப் பதிவானது.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரியும், அமெரிக்கா செல்ல அனுமதிக்கும்படியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி நாக பிரசன்னா விசாரித்து வந்தார். நேற்று முன்தினம் நடந்த விசாரணைக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
'பிரெஞ்ச் பிரை' வாங்கிக் கொடுக்கவில்லை என்பதற்காக, மனுதாரர் மீது அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிவு செய்தது முற்றிலும் அற்பமானது. மனைவி அளித்த புகாருக்கு போலீசார் தேவையில்லாத முன்னுரிமை அளித்துள்ளனர்.
மனுதாரர் மீது விசாரணையை அனுமதிப்பது சட்டத்தை மீறும் செயலாகும். அவரிடம் விசாரிக்க தடை விதிப்பதுடன், அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.