இலங்கையில் அதானிக்கு எதிர்ப்பு காற்றாலை திட்டம் ரத்தாகுமா?
இலங்கையில் அதானிக்கு எதிர்ப்பு காற்றாலை திட்டம் ரத்தாகுமா?
ADDED : செப் 17, 2024 12:17 AM

கொழும்பு :''தேர்தலில் வெற்றி பெற்றால், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்காக அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்,'' என, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21ல் நடக்கிறது. இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அச்சுறுத்தல்
இந்த தேர்தலில், ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் திசநாயகே நேற்று பேசுகையில், ''இந்தியாவை சேர்ந்த அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்புதல், நம் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த ஒப்புதலை ரத்து செய்வோம்,'' என்றார்.
இலங்கையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் 20 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில், 3,600 கோடி ரூபாயை அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், இது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கூறி, திட்டத்துக்கு தடை விதிக்க கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பிரேமதாசாவுக்கு ஆதரவு
இதற்கிடையே, தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக, முன்னாள் எம்.பி., பாக்கியசெல்வம் அரியேந்திரனைஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டணி முன்னர் அறிவித்தது.
இந்நிலையில், கூட்டணியின் முதன்மை கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி நடத்திய அரசியல் குழுக்கூட்டத்தில், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஆனால், கட்சியின் மூத்த தலைவர் அரியேந்திரனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.