ADDED : ஆக 01, 2024 11:17 PM

-
'கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பைந்துாரில் விமான நிலையம் அமைக்க வேண்டும்' என்று, விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம், ஷிவமொகா பா.ஜ., -- எம்.பி., ராகவேந்திரா கோரிக்கை வைத்துள்ளார்.
உடுப்பி மாவட்டம், கொல்லுாரில் மூகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெங்களூரு, மைசூரு உட்பட கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், மூகாம்பிகை ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்கு செல்கின்றனர். விமானத்தில் செல்வோர், மங்களூரு சென்று அங்கிருந்து கோவிலை சென்றடைகின்றனர்.
இந்நிலையில் டில்லியில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை, ஷிவமொகா பா.ஜ., -- எம்.பி., ராகவேந்திரா, பைந்துார் பா.ஜ., -- எம்.எல்.ஏ., குருராஜ் கந்திஹோலே சந்தித்து பேசினர்.
அப்போது, 'கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு தினமும் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக விமான நிலையம் அமைத்தால் நன்றாக இருக்கும். மூகாம்பிகை ரோடு ரயில் நிலையம் அருகே 500 ஏக்கர் நிலமும் உள்ளது' என்று கூறினர்.
விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
- நமது நிருபர் - -