2,500 ரூபாய் இன்று கிடைக்குமா? ரேகாவுக்கு ஆதிஷி கடிதம்
2,500 ரூபாய் இன்று கிடைக்குமா? ரேகாவுக்கு ஆதிஷி கடிதம்
ADDED : மார் 07, 2025 10:29 PM

புதுடில்லி:“பெண்களுக்கு மாதந் தோறும் 2,500 வழங்குவதாக பா.ஜ., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,” என, முன்னாள் முதல்வர் ஆதிஷி சிங் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ரேகா குப்தாவுக்கு, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஆதிஷி சிங்அனுப்பியுள்ள கடிதம்:
தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., ஆட்சி அமைந்தவுடன், பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 வழங்கும் திட்டத்துக்கு, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஒப்புதல் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும், சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி, டில்லியில் வசிக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் முதல் தவணையான 2,500 ரூபாய் வரவு வைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி அளித்து இருந்தார்.
ஆனால், பதவியேற்று பல நாட்கள் ஆகியும், இந்தத் திட்டம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மகளிர் தினமான இன்று, தங்கள் வங்கிக் கணக்கில் 2,500 ரூபா வரும் என டில்லியில் வசிக்கும் பெண்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ., ஆட்சி அமைத்தவுடன், எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற ஆதிஷி, ஆரம்பத்தில் இருந்தே, பெண்கள் நிதி திட்டம் குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இது, பா.ஜ.,வுக்கு சற்று தலைவலியைக் கொடுத்தாலும், பிரதமர் நரேந்திர மோடி தேதி குறிப்பிட்டு உறுதிமொழி அளித்ததை ஆம் ஆத்மி கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இது, பா.ஜ.,வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.