கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு
ADDED : மே 09, 2024 12:54 AM
புதுடில்லி, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் தொடர்பான வழக்கில், நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்ச் 21ல் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, கைதை எதிர்த்தும், லோக்சபா தேர்தலை ஒட்டி ஜாமின் வழங்கக் கோரியும், கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, 'தேர்தலுக்காக கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினாலும், அவர் முதல்வருக்கான அலுவல்களை கவனிப்பது, கோப்புகளில் கையெழுத்திடுவதை நீதிமன்றம் அனுமதிக்காது' என நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு, அடுத்த விசாரணைக்கு இன்று அல்லது இந்த வாரத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கெஜ்ரிவால் வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக கேட்ட போது, நீதிபதி சஞ்சீவ் கன்னா இதை தெரிவித்தார்.