ADDED : ஏப் 04, 2024 04:28 AM

சித்ரதுர்கா, : ''கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்திரப்பா கூறி உள்ளார்.
சித்ரதுர்கா ஹொலல்கெரே பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்திரப்பா. இவரது மகன் ரகுசந்தன். லோக்சபா தேர்தலில் சித்ரதுர்கா தொகுதி 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் முன்னாள் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோளுக்கு, பா.ஜ., மேலிடம் வாய்ப்பு அளித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ரகுசந்தன், சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார். உஷாரான பா.ஜ., தலைவர்கள் ரகுசந்தனையும், சந்திரப்பாவையும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் சந்திரப்பா வீட்டிற்கு நேற்று சென்ற கோவிந்த் கார்ஜோள், சித்ரதுர்காவில் தனது வெற்றிக்கு உதவும்படி வேண்டுகோள் வைத்தார். சந்திரப்பாவும் சம்மதம் தெரிவித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின்னர், அடுத்த லோக்சபா தேர்தலில், ரகுசந்தனுக்கு 'சீட்' தருவதாக, பா.ஜ., தலைவர்கள் என்னிடம் கூறியிருந்தனர். இதனால் ரகுசந்தன் தொகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். இளைஞர்களை சந்தித்து கட்சிக்கு ஆதரவு திரட்டினார். ஆனால் கடைசியில் அவருக்கு சீட் இல்லை என்று சொன்னதும், எங்களுக்கு கோபம் வந்தது.
இதனால் அவதுாறாக பேசி இருக்கலாம். ஆனாலும் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு, நாங்கள் கட்டுப்படுவோம். பிரதமர் மோடி நமக்கு முக்கியம். அவருக்காக எந்த தியாகம் செய்யவும் தயார். கோவிந்த் கார்ஜோளை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, எனக்கு உள்ளது. அவரை வெற்றி பெற வைப்பேன். கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

