திறந்த பொது வெளியில் பிரதமர் மோடி பதவியேற்பாரா ?
திறந்த பொது வெளியில் பிரதமர் மோடி பதவியேற்பாரா ?
ADDED : மே 30, 2024 01:22 PM

புதுடில்லி: தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மெஜாரிட்டி கிடைத்தால் பதவியேற்பு விழா எவ்வாறு நடத்துவது ? எங்கே நடத்துவது ? என பா.ஜ., உயர்மட்டக்குழு ஆலோசித்து வருகிறது.
வரும் ஜுன் 4 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவிருக்கிறது. முடிவுகள் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக வரும் பட்சத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து பல்வேறு திட்டங்கள் பா.ஜ., கட்சிக்குள் நிலவுகிறது.
பதவியேற்பு என்பது வழக்கம் போல் ஜனாதிபதி மாளிகையில் தான் நடக்கும். இந்த முறை இந்த வழக்கத்தை மாற்றி டில்லியில் ஏதனும் திறந்த வெளியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிகம் பேர் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என பா.ஜ.,வினர் கருதுகின்றனர்.
டில்லி கேட் பகுதியான கர்த்வயா (கடமை பாதை ) பகுதியில் நடத்தலாமா அல்லது வேறு இடம் தேர்வு செய்யலாமா என்றும் யோசிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் 2014 மே 16 ல் தேர்தல் முடிவுகள் வெளியானது. மே- 26 ல் பதவியேற்பு நடந்தது. இது போல் 2019 மே23 ல் தேர்தல் முடிவுகள் வெளியானது. மே30ல் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடந்தது.
ஜனாதிபதிகள்
இரண்டுமே ஜனாதிபதி மாளிகையில் தான் நடந்தது . முதன்முதலாக ஜனாதிபதியாக இருந்த காங்கிரசை சேர்ந்த பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாவது முறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த முறை திறந்த பொது வெளியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியே வானவேடிக்கை மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். ஜனாதிபதி திரவுபதி முர்மு இங்கு வந்து பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.