ராஜண்ணா, பரமேஸ்வர் ராஜினாமா? காங்., - எம்.எல்.ஏ., தரப்பு அதிரடி!
ராஜண்ணா, பரமேஸ்வர் ராஜினாமா? காங்., - எம்.எல்.ஏ., தரப்பு அதிரடி!
ADDED : பிப் 26, 2025 11:18 PM

துமகூரு: அமைச்சர்கள் ராஜண்ணா, பரமேஸ்வர் விரைவில் பதவியை ராஜினாமா செய்வர் என்று, குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் ரசிகர் மன்றத்தினர், முகநுால் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இதன்மூலம் துமகூரு காங்கிரசில் கோஷ்டி பூசல் அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது.
கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர். இவர்கள் இருவரும் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
மூத்த தலைவர்களான இருவரும் துமகூரு மாவட்ட அரசியலில், தனி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்கள் நினைத்தது தான் மாவட்டத்தில் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இதனால், துமகூரு மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களான திப்துார் சடாக் ஷரி, குனிகல் ரங்கநாத், குப்பி சீனிவாஸ், சிரா ஜெயசந்திரா ஆகியோர், பரமேஸ்வர், ராஜண்ணா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் துமகூரு மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக, ராஜண்ணா, பரமேஸ்வர் அழுத்தத்தால் பாவகடா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வெங்கடேஷ் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனால் கடும் கோபம் அடைந்த சீனிவாஸ், ராஜண்ணாவை விமர்சித்தார். பதிலுக்கு சீனிவாசை, ராஜண்ணாவும் சாடியதால் இருவருக்கும் இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது.
இந்நிலையில், 'அமைச்சர்கள் பரமேஸ்வர், ராஜண்ணா விரைவில் தங்கள் பதவியை ராஜினாமா செய்வர்' என்று, சீனிவாஸ் ரசிகர் மன்றத்தினர், முகநுால் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி, துமகூரு மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டர்கள், ஆதரவாளர்கள் கூறினால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பரமேஸ்வர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.