தொழில் வளர்ச்சிக்கு உதவுமா சாம்ராஜ்நகர் - பீதர் ரயில் பாதை
தொழில் வளர்ச்சிக்கு உதவுமா சாம்ராஜ்நகர் - பீதர் ரயில் பாதை
ADDED : ஜூலை 11, 2024 04:26 AM
பெங்களூரு : கர்நாடகாவின் தென் திசையில் இருந்து, வடக்கு திசைக்கு இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில், சாம்ராஜ்நகர் - பீதர் இடையே ரயில் பாதை அமைக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சிறு, சிறு பகுதிகளை நகரங்களுடன் இணைப்பு ஏற்படுத்தும் நோக்கில், ரயில்வே திட்டம் வகுத்துள்ளது. சாம்ராஜ்நகர் - பீதர் இடையே ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படும். கர்நாடகாவின் தென் திசையில் இருந்து வடக்கு திசைக்கு செல்லும் பயணியருக்கு உதவியாக இருக்கும்.
இந்த ரயில் மைசூரு, ஹாசன், அரசிகெரே, பீரூர், சித்ரதுர்கா, பல்லாரி, ராய்ச்சூர், யாத்கிர், கலபுரகி ஆகிய நகரங்கள் வழியாக செல்லும். அந்தந்த பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம். சாம்ராஜ்நகர் - பீதர் ரயில் பாதை போக்குவரத்து மேம்பாட்டுக்கு, தொழில் வளர்ச்சிக்கு வசதியாக இருக்கும்.
சாம்ராஜ்நகர், பீதர் மாவட்டங்களின் பொருளாதாரம் வளரும். சமீப ஆண்டுகளில், சாம்ராஜ்நகரில் தொழிற்சாலைகள் அதிகரிக்கின்றன. கேன்ஸ் டெக்னாலஜி, இ.எஸ்.டி.எம்., நிறுவனம், கலர்டூன் டெக்ஸ் டைல்ஸ், கிராசிம் பெயின்ட் பிளான்ஸ் உட்பட, பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளில், போக்குவரத்து வசதி மிகவும் முக்கியமானது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

