ADDED : மார் 04, 2025 05:04 AM

கொப்பால்: ''முதல்வர் சித்தராமையாவுக்கு வயதாகிவிட்டது. அவருக்கு உடல் ஆரோக்கிய பிரச்னை உள்ளது. எனவே அவர், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
கொப்பாலில் நேற்று அவர் கூறியதாவது:
துணை முதல்வர் சிவகுமார், ஹிந்துவாக பிறந்தவர்; ஹிந்துவாகவே நீடிப்பார். ஹிந்து சம்பிரதாயப்படி, பூஜை, புனஸ்காரங்கள் செய்கிறார். இதற்கு சிறப்பு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். அரசியல் வேறு. அவர் பூஜைகள், வழிபாடு நடத்துவது, இதுவே முதன் முறை அல்ல.
முதல்வர் சித்தராமையாவுக்கு வயதாகிவிட்டது. அவருக்கு உடல் ஆரோக்கிய பிரச்னையும் உள்ளது. எனவே முதல்வர் பதவியை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
தனிப்பட்ட விருப்பம் மற்றும் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்யும் வாய்ப்புகள் அதிகம். எனவே அரசு கவிழும் என, நான் கூறினேன்.
கடந்த முறை முதல்வராக இருந்தபோது, ஆட்சி நடத்தியதை போன்று, இப்போது நடத்த சித்தராமையாவால் முடியவில்லை. அவருக்கு தனிப்பட்ட பிரச்னைகளும் உள்ளன. எனவே பதவியை அவர் ராஜினாமா செய்வார் என, சிலரின் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது.
சிவகுமார், தேவகவுடா தெய்வ பக்தர்கள். பொது மக்களுக்கு தெரியும்படி பூஜைகள், வழிபாடுகள் நடத்துவது சகஜம்தான்.
சிவகுமார் பா.ஜ.,வுக்கு வந்து, முதல்வராவாரா என்பது, எனக்கு தெரியாது. ஆனால் டிசம்பர் வேளையில், கர்நாடக காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதி.
கடந்தாண்டு ஆனேகுந்தியில் நடந்த உற்சவ நிதி, கலைஞர்கள், மேடை அமைத்தவர்கள், நினைவுப் பரிசு தயாரித்தவர்களுக்கும், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கும், மாநில அரசு பண பாக்கி வைத்துள்ளது. எனவே நடப்பாண்டு உற்சவம் நடப்பதே சந்தேகம்.
இவ்வாறு அவர் கூறினார்.