இன்று தேர்தல் நடக்கும் 14 தொகுதியில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறுமா?
இன்று தேர்தல் நடக்கும் 14 தொகுதியில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறுமா?
ADDED : மே 07, 2024 06:20 AM
கர்நாடகாவில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும், 14 தொகுதிகளிலும் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறுமா என்று, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலை, கர்நாடக அரசியல்வாதிகள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த தேர்தலில் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில், பா.ஜ., 25 இடங்களில், அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ், ம.ஜ.த., சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர். இதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் அலை.
தென்மாவட்டங்களில் உள்ள 14 தொகுதிகளில், பா.ஜ., 11 இடங்களிலும், வடமாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றி இருந்தது.
வடமாவட்டத்தில் 14 தொகுதிகளிலும் வேட்பாளர்கள், வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, லிங்காயத் சமூக ஓட்டுகள் உள்ளன. கடந்த தேர்தலில் லிங்காயத் சமூகம், பா.ஜ.,வை முழுமையாக ஆதரித்தது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசை கவிழ்க்கவும் ஒரு வகையில் உதவியது. அதன்விளைவாக பா.ஜ., ஆட்சிக்கு வந்தது.
100 நாள் போராட்டம்
தேர்தலில் ஆதரித்ததால் பா.ஜ., தங்களுக்கு ஆதரவாக செயல்படும் என்று, லிங்காயத் சமூகத்தினர் எதிர்பார்த்தனர். லிங்காயத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் 2ஏ இடஒதுக்கீடு கேட்டனர். அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் இடஒதுக்கீடு கேட்டு, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி தலைமையில், பெங்களூரில் 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் கடைசி கட்டத்தில் பிரச்னை ஏற்பட்டதால், மடாதிபதி கண்ணீருடன் போராட்டத்தை கைவிட்டார்.
ஆட்சிகாலம் முடியும் நேரத்தில், 2டி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனாலும் பஞ்சமசாலி சமூகத்தினர் திருப்தி அடையவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய காங்கிரஸ், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பஞ்சமசாலி சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் கிடைத்தது. காங்கிரசை பஞ்சமசாலிகள் ஆதரித்ததால் வெற்றியும் கிடைத்தது.
வாக்கு வங்கி
இந்நிலையில் லோக்சபா தேர்தலில், வடமாவட்டத்தின் 14 தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற, காங்கிரஸ் இலக்கு வைத்து உள்ளது. ஆனால் சட்டசபை தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கும் மக்கள், லோக்சபா தேர்தலில் ஆதரிப்பது இல்லை.
இதனால் சுதாரித்து கொண்ட காங்கிரஸ் அரசு, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த சீர்திருத்தவாதி பசவண்ணரை, கர்நாடக கலாசார தலைவராக அறிவித்தது.
சுதந்திர தின மலர் கண்காட்சியிலும் வடமாவட்ட நினைவு சின்னங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் மீது, லிங்காயத் மக்களுக்கு மென்மையான போக்கு ஏற்பட்டு உள்ளது.
வீரசைவ மகாசபை செயலர் ரேணுகா பிரசன்னா கூறுகையில், ''லிங்காயத் சமூகம் பா.ஜ.,வை ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரித்தது உண்மை தான். ஆனால் எப்போதும் பா.ஜ.,வின் வாக்கு வங்கியாக, லிங்காயத் சமூகம் இருக்காது,'' என்றார்.
வடமாவட்ட தொகுதிகள் குறித்து, அரசியல் வல்லுனரான மூர்த்தி கூறுகையில், ''வடமாவட்டத்தில் 14 தொகுதிகளிலும் 12 முதல் 20 சதவீதம் சிறுபான்மையினர் ஓட்டுகள் உள்ளது. இந்த ஓட்டுகளை பெறுவது பா.ஜ.,வுக்கு கஷ்டமாக இருக்கும். மல்லிகார்ஜுன கார்கேயை காங்கிரஸ் தேசிய தலைவராக நியமித்து இருப்பது, தலித் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திஉள்ளது.
இதனால் தலித் ஓட்டுகளை கவருவதும், பா.ஜ.,வுக்கு சவாலாக இருக்கலாம். உட்கட்சி பூசலை சரி செய்யாமல், தேர்தலை சந்திப்பதும் அவர்களுக்கு சவாலாக இருக்கும்,'' என்று கூறி உள்ளார்.
சவால்களை மீறி 14 தொகுதிகளிலும், பா.ஜ., மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.- நமது நிருபர் -