sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தரகன்னடாவில் பா.ஜ., கோட்டையை தகர்க்குமா காங்.,?  அனந்தகுமார் ஹெக்டேவால் காகேரி வெற்றி கேள்விக்குறி!

/

உத்தரகன்னடாவில் பா.ஜ., கோட்டையை தகர்க்குமா காங்.,?  அனந்தகுமார் ஹெக்டேவால் காகேரி வெற்றி கேள்விக்குறி!

உத்தரகன்னடாவில் பா.ஜ., கோட்டையை தகர்க்குமா காங்.,?  அனந்தகுமார் ஹெக்டேவால் காகேரி வெற்றி கேள்விக்குறி!

உத்தரகன்னடாவில் பா.ஜ., கோட்டையை தகர்க்குமா காங்.,?  அனந்தகுமார் ஹெக்டேவால் காகேரி வெற்றி கேள்விக்குறி!


ADDED : மே 02, 2024 06:21 AM

Google News

ADDED : மே 02, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் ஒரு காலத்தில் காங்கிரஸ் செல்வாக்கு செலுத்தியது. ஆனால் 1990 கால கட்டத்திற்கு பின், கடலோர மாவட்டங்கள் பா.ஜ.,வின் கோட்டையாக மாற ஆரம்பித்தது. சட்டசபை, லோக்சபா தேர்தலில் கடலோர மாவட்டங்களில் பா.ஜ., ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,விடம் இருந்து கடலோர மாவட்ட தொகுதிகளை, எப்படியாவது தட்டி பறிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை என்பது அக்கட்சிக்கும் நன்கு தெரியும். இதில், பா.ஜ., ஆதிக்கம் செலுத்தி வரும் உத்தர கன்னடா தொகுதி பற்றி பார்க்கலாம்.

இந்த தொகுதியில் இரு மாவட்டங்கள் உள்ளன. பெலகாவியின் கானாபுரா, கிட்டூர்; உத்தர கன்னடாவின் ஹலியால், கார்வார், பட்கல், சிர்சி, குமட்டா, எல்லாபுரா ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது உத்தர கன்னடா லோக்சபா தொகுதி. கடந்த 1952 முதல் 2019 வரை இந்த தொகுதி 17 தேர்தலை சந்தித்து உள்ளது. இதில் காங்கிரஸ் 10 முறையும், பா.ஜ., 6 முறையும், சுயேச்சை ஒரு தடவையும் வெற்றி பெற்று உள்ளனர்.

அலற விட்ட ஹெக்டே


காங்கிரசின் தேவராஜ் நாயக் நான்கு முறையும், ஜோசிம் ஆல்வா மூன்று முறையும் எம்.பி.,யாக இருந்து உள்ளனர். தேவராஜ் நாயக் எம்.பி.,யாக இருந்த போது, உத்தர கன்னடா தொகுதியில் அவருக்கு எதிராக, கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது.

ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது 28 வயது இளைஞராக இருந்த ஒருவர், ஹிந்துத்வாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் அவர் பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

காங்கிரசின் ஆதிக்கத்தை முறியடித்து அந்த இளைஞன் வெற்றி பெற்று காட்டினார். அவர் வேறு யாரும் இல்லை, ஹிந்துத்வாவாதி என்று அடையாளம் காணப்படும் அனந்தகுமார் ஹெக்டே தான். 1998ல் நடந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று, காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஆனால், 1999 தேர்தலில் அவர் தோற்று போனார். இதனால் காங்கிரசார் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

ஆனால் அந்த உற்சாகம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் தான் இருந்தது. அதன்பின்னர் 2004, 2009, 2014, 2019 என நான்கு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, காங்கிரசை கதற விட்டார்.

ஹிந்துத்துவாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலும் கைதேர்ந்தவர்.

தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று ஆஸ்பத்திரியில் ரகளை செய்தது; தற்போதைய சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவின் திருமணம் பற்றி பேசியது; காங்கிரஸ் எம்.பி., ராகுலின் பிறப்பு பற்றி பேசியது; முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்திலை துரோகி என்று விமர்சித்தது என பல்வேறு சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சீட் மறுப்பால் அதிருப்தி


ஆனால் அவர் மத்திய அமைச்சராக இருந்த போது, 'அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவே ஆட்சிக்கு வந்தோம்' என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது. நாடு முழுதும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அமைச்சர் பதவியை இழந்தார். அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் கூட, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை. இதனால் உத்தர கன்னடா மாவட்டத்தின் நான்கு சட்டசபை தொகுதிகள், பா.ஜ.,வின் கையை விட்டு போனது.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு, மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தார். எம்.பி., சீட் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு சீட் தரப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அனந்தகுமார் ஹெக்டே மீண்டும், வீட்டிற்குள் முடங்கி உள்ளார்.

பா.ஜ., வேட்பாளர் போன் செய்தாலும், அவர் எடுப்பது இல்லை. அனந்தகுமார் ஹெக்டேயின் ஆதரவாளர்களும், பா.ஜ., வேட்பாளர்களுக்காக வேலை செய்வது இல்லை. அனந்தகுமார் ஹெக்டேயின் ஆதரவு கிடைக்காமல், விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தனித்து விடப்பட்டு உள்ளார். ஆனாலும் மனம் தளராமல் தனி ஆளாக பிரசாரம் செய்கிறார். சமீபத்தில் பிரதமர் மோடி இவரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

காங்., கணக்கு


காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர். முன்னாள் எம்.எல்.ஏ., இவருக்கு ஆதரவாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பிரசாரம் செய்ய உள்ளனர். காகேரிக்கு, அனந்தகுமார் ஹெக்டே ஆதரவு கிடைக்காததால், அதை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று, காங்கிரஸ் கணக்கு போட்டு உள்ளது. தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

பா.ஜ.,விற்கு மூன்று எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலும், எல்லாபுரா எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார், காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இது அஞ்சலி நிம்பால்கருக்கு சாதகமாகவும், காகேரிக்கு பாதகமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனாலும் உத்தர கன்னடா பா.ஜ., கோட்டை என்பதால் எப்படியும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் காகேரி உள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us