பதவி தொடருமா... பறிபோகுமா? கர்நாடக அமைச்சர்கள் 'திக் திக்'
பதவி தொடருமா... பறிபோகுமா? கர்நாடக அமைச்சர்கள் 'திக் திக்'
ADDED : மே 09, 2024 10:28 PM

பெங்களூரு,- லோக்சபா தேர்தல் முடிந்து உள்ள நிலையில், கர்நாடக அமைச்சர்கள், 'திக்திக்' மனநிலையில் உள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 26ம் தேதி, இம்மாதம் 7ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பு பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் 28 தொகுதிகளிலும், வெற்றி பெறுவோம் என்றனர்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றனர்.
வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
வேட்பாளர் தோல்வி அடைந்தால், அவரது தோல்விக்கு அவர்களே பொறுப்பு. சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று, தேர்தல் நடப்பதற்கு முன்பே தகவல் வெளியானது. இதனால் பதவியை தக்க வைத்து கொள்ள அமைச்சர்கள், தீயாய் வேலை செய்தனர்.
அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகனும், பெலகாவி காங்கிரஸ் வேட்பாளருமான மிருணாளை, வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு கொடுக்கப்பட்டது.
சிக்கோடியில் போட்டியிட்ட சதீஷின் மகள் பிரியங்காவின் வெற்றிக்கான பொறுப்பு, அமைச்சர் லட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் லட்சுமி, சதீஷ் இடையில் பனிப்போர் நடக்கிறது. இதனால் இருவரும் தங்கள் வாரிசுகளுக்கு மட்டும், பிரசாரம் செய்தனர்.
இதுபோல அமைச்சர்கள் மஹாதேவப்பா, ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோர் தங்கள் மகன்களுக்காகவும், அமைச்சர் மல்லிகார்ஜுன் தன் மனைவிக்காகவும், அமைச்சர் சிவானந்த பாட்டீல் தன் மகளுக்காகவும் மட்டும் வேலை செய்தனர்.
மற்ற இடங்களுக்கு பிரசாரத்திற்கு வரவில்லை.
அவர்கள் மீது மற்ற அமைச்சர்கள் கோபத்தில் உள்ளனர்.
'வாரிசுகள் வெற்றிக்காக உழைத்து, நல்ல பெயர் வாங்கினால் போதுமா; மற்றவர்களை யோசித்து பார்க்க வேண்டாமா' என்று, ஆதங்கத்துடன் உள்ளனர்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இல்லா விட்டால் பதவி பறிபோய் விடுமோ என்று, 'திக்திக்' மன நிலையில் உள்ளனர்.