கைதாவாரா?: 'போக்சோ' வழக்கில் எடியூரப்பாவுக்கு 'பிடிவாரன்ட்'
கைதாவாரா?: 'போக்சோ' வழக்கில் எடியூரப்பாவுக்கு 'பிடிவாரன்ட்'
UPDATED : ஜூன் 14, 2024 05:32 PM
ADDED : ஜூன் 14, 2024 07:41 AM

பெங்களூரு: 'போக்சோ' வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை கைது செய்வதற்கு, சி.ஐ.டி., போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
பா.ஜ.,வை சேர்ந்தவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81. பெங்களூரு டாலர்ஸ் காலனியில், இவரது வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி, சதாசிவ நகரில் வசிக்கும் மமதா, 55, என்ற பெண், தன் 17 வயது மகளுடன் சென்றார்.
உதவி கேட்டு சென்ற என் மகளை பாலியல் ரீதியாக எடியூரப்பா துன்புறுத்தினார் என்று, சதாசிவநகர் போலீசில், அப்பெண் மார்ச் 14ம் தேதி புகார் அளித்தார். எடியூரப்பா மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்தனர்.
போலீஸ் கமிஷனர்
இதற்கு, 'உதவி கேட்டு வந்தவருக்கு, போலீஸ் கமிஷனர் தயானந்தை தொடர்பு கொண்டு, உதவும்படி கூறினேன். இது தான் நான் செய்த தவறு' என்று அப்போதே எடியூரப்பா விளக்கம் அளித்தார்.
இவ்வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில், புகார் அளித்த பெண், மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதுபோன்று ஏற்கனவே 53 முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், புகார் அளித்த மமதா, புற்றுநோய் பாதிக்கப்பட்டு மே 27ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஹைகோர்ட்டில் வழக்கு
மேலும், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, எடியூரப்பா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையறிந்த மமதாவின் சகோதரர், வழக்கு பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி., தரப்பில் சம்மன் வழங்கியும், எடியூரப்பா ஆஜராகவில்லை. தான் டில்லியில் இருப்பதாகவும், மூன்று நாட்கள் கால அவகாசம் கேட்டும், சி.ஐ.டி., அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், எடியூரப்பாவை கைது செய்ய ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., தரப்பில், பெங்களூரு 51வது சிட்டி சிவில் மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
4 முறை முதல்வர்
இம்மனு, நீதிபதி என்.எம்.ரமேஷ் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் அசோக் நாயக் வாதாடியதாவது:
எடியூரப்பா, 17 வயது சிறுமியை ஒரு அறைக்குள் அழைத்து சென்று, உடல் உறுப்புகளை தொட்டு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளார். அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அவர் மிகவும் செல்வாக்கு மிக்கவர். நான்கு முறை மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். அவரது ஒரு மகன், எம்.பி.,யாகவும், மற்றொரு மகன் ஒரு கட்சியின் மாநில தலைவராகவும் இருக்கிறார்.
சி.ஐ.டி., நோட்டீஸ் வழங்கியும், விசாரணைக்கு ஆஜராகவில்லை. மீண்டும் மீண்டும் நேரம் கேட்கிறார். சம்பவம் நடந்த நாளன்றே, புகார்தாரருக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை, வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளார்.
ரூ.2 லட்சம்
'நீ கஷ்டத்தில் இருக்கிறாய், இந்த பணத்தை வைத்து கொள்' என்று சமாதானம் செய்வது போன்று, சாட்சியை நாசம் செய்ய முயற்சித்துள்ளார். எடியூரப்பாவை சந்திக்க சென்ற போது, அந்த பெண் பதிவு செய்த வீடியோவையும், நீக்கியுள்ளார்.
ஒரு வேளை விசாரணைக்கு ஆஜராவதற்கு, அவர் கேட்கும் நேரத்தை வழங்கினால், சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதன்பின், எடியூரப்பாவை கைது செய்ய ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, எந்த நேரமும் அவரை கைது செய்வதற்கு, சி.ஐ.டி., போலீசார் தயார் நிலையில் உள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், வழக்கை ரத்து செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.