பா.ஜ.,வுக்கு வேலை பார்ப்பதா? காங்., நிர்வாகிகளுக்கு ராகுல் எச்சரிக்கை
பா.ஜ.,வுக்கு வேலை பார்ப்பதா? காங்., நிர்வாகிகளுக்கு ராகுல் எச்சரிக்கை
ADDED : மார் 09, 2025 12:14 AM

ஆமதாபாத், மார்ச் 9--
காங்கிரஸ் கட்சிக்குள், தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பா.ஜ.,வுக்காக வேலை பார்ப்பவர்கள் இருப்பதாக, ராகுல் வேதனையுடன் தெரிவித்தார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 1995-ல் ஆட்சியை பறிகொடுத்த காங்., 30 ஆண்டுகளாக மீண்டும் அரியணையில் அமர முடியவில்லை.
கடந்த 2022 சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182 இடங்களில், 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், குஜராத் சென்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஆமதாபாதில் கட்சியினரிடையே நேற்று பேசியதாவது:
காங்.,கில் இரண்டு விதமான தலைவர்களும், தொண்டர்களும் உள்ளனர். ஒருதரப்பினர், கட்சி கொள்கையை இதயத்தில் சுமந்து, மக்கள் நலனுக்காக போராடுபவர்கள். மற்றொரு தரப்பினர், மக்களிடம் தொடர்பு இல்லாதவர்கள்; காங்.,கில் இருந்து கொண்டு, பா.ஜ.,வுக்காக பணியாற்றுபவர்கள்.
கட்சியின் முதல் வேலை, இந்த இரண்டு பிரிவையும் கண்டறிந்து, பா.ஜ.,வுக்காக பணியாற்றுவோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
அதுவரை, குஜராத் மக்கள் காங்கிரஸை நம்ப மாட்டார்கள்.
காங்.,கின் உண்மையான தலைமையான காந்தியையும், கட்சியின், ஐந்து முக்கிய தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் படேலையும் தந்தது, குஜராத் மாநிலம் தான்.
ஆனால், குஜராத் மக்களின் எதிர்பார்ப்புகளை காங்., தலைவர்களால் 30 ஆண்டுகளாக பூர்த்தி செய்ய முடியவில்லை. அச்சத்தினாலோ, வெட்கத்தினாலோ நான் இதை பேசவில்லை. குஜராத்துக்கு நாம் வழிகாட்ட முடியவில்லை என்பதை உங்கள் முன் வைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.