ADDED : ஆக 03, 2024 12:51 AM

சர்ச்சைக்குரிய அறிக்கை வாபஸ்
'வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு, மாநிலத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரில் செல்ல வேண்டாம். இது குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்' என, கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கையை திரும்பப் பெறும்படி, தலைமை செயலர் வி.வேணுவுக்கு, முதல்வர் பினராயி விஜயன் நேற்று உத்தரவிட்டார்.
மூன்று நாட்களுக்கு பின்
4 பேர் பத்திரமாக மீட்பு
வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று நாட்களுக்கு பின், படவெட்டி குன்னு என்ற இடத்தின் அருகே, இரு பெண்கள் உட்பட நான்கு பேரை மீட்புப் படையினர் நேற்று பத்திரமாக மீட்டனர். வெள்ளரிமலை பகுதியைச் சேர்ந்த ஜான், ஜோமோல் ஜான், கிறிஸ்டின் ஜான், ஆபிரகாம் ஜான் ஆகியோரை மீட்ட மீட்புப் படையினர், அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றனர். மோப்ப நாய் உதவியுடன், அவர்கள் சிக்கியிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
மீட்பு பணியில்
மோப்ப நாய்கள்
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியோரை கண்டறியும் பணியில், நம் ராணுவத்தைச் சேர்ந்த- ஜக்கி, டிக்ஸி, சாரா -ஆகிய மோப்ப நாய்கள்- ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் நபர்களை மோப்பம் பிடிப்பதில், இந்த நாய்கள் உயர் பயிற்சி பெற்றவை. உ.பி.,யின் மீரட் கான்ட்டில் உள்ள நாய் பயிற்சி மையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்த மோப்ப நாய்கள், அயராது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
பாலம் கட்டும் பணியில் பெண் அதிகாரி சீதா
வயநாட்டில், சூரல்மலை - முண்டக்கை பகுதிகளை இணைக்கும் வகையில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கிராமங்கள் துண்டிக்கப்பட்டன; மீட்புப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், இரு கிராமங்களை இணைக்கும் வகையிலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், நம் ராணுவத்தினர் பெய்லி பாலத்தை அமைத்தனர். 190 அடி உடைய இந்த பாலத்தை, இடைவேளையின்றி, 31 மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்தனர். 3 மீட்டர் அகலமுடைய இந்த பாலத்தில், 24 டன் எடையை ஏற்றிச் செல்லலாம். கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் பிரிவைச் சேர்ந்த, 144 பேர் அடங்கிய குழுவினர், பெய்லி பாலத்தை கட்டினர். இக்குழுவில், சீதா அசோக் ஷெல்கே என்ற பெண் அதிகாரி, பாலம் கட்டும் பணியை முன்னின்று நடத்தினார்.
இது தவிர, நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பெய்லி பாலத்திற்கு இணையாக, மற்றொரு 100 அடி நடைபாலத்தை, மூன்று மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்தனர்.