ADDED : ஆக 01, 2024 12:07 AM
மாரத்தஹள்ளி : உரிமையாளர் வீட்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிய, வீட்டு வேலைக்கார பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, மாரத்தஹள்ளியில் வசிப்பவர் திவ்யஸ்ரீ, 30. ஐ.டி., நிறுவன ஊழியர். குழந்தைகளை பராமரிப்பதற்காக திவ்யா, 24 என்ற இளம் பெண்ணை வேலைக்கு சேர்த்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யஸ்ரீ, குடும்பத்தினர் சுற்றுலா சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. மாரத்தஹள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில், வேலைக்கார பெண் திவ்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை அவர் திருடியது தெரிந்தது.
திருடிய நகைகளை விற்பனை செய்வதற்கு திவ்யாவின் பெரியம்மா மஞ்சுளா, 45, உறவினர் ஜோமன், 38 உதவியது தெரிந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்டனர்.